SuperTopAds

அரசியலில் குதிப்பதாக ரஜினிகாந்த் அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்.. கொந்தளிக்கின்றார் சீமான்

ஆசிரியர் - Editor II
அரசியலில் குதிப்பதாக ரஜினிகாந்த் அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்.. கொந்தளிக்கின்றார் சீமான்

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்த்து கடுமையான அரசியல் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சென்னையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ்நாட்டில் மட்டும் தான் அனைவரும் ஜனநாயகமும் பேசுவார்கள், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று இந்த தேசத்தில் மட்டும் தான் சொல்வார்கள்.

காவிரிப் பிரச்சினையின் போது சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகளைப் போல விரட்டியடிக்கப்பட்டார்களே அப்போது எங்கே போனார் இவர்.

பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, ஆண்களும், பெண்களும் தாக்கப்பட்டனர். அப்போது ஏன் மக்களை அடித்து விரட்டுகிறார்கள் என்று யாரும் கேட்கவில்லையே.

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம். ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது மக்களிடம் கொண்டு செல்ல, அவர் என்ன சொல்கிறார் சிஸ்டம் சரியில்லை என்கிறார்.

சிஸ்டம் என்றால் அமைப்பு, அதைத் தான் நாங்களும் அமைப்பு சரியில்லை, எந்தெந்த அமைப்பு சரியில்லை என்று சொல்லி வருகிறோம்.

ரஜினியின் அரசியல் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. பெங்களூரு எங்களின் வாழ்விடம், கர்நாட்காவிற்குள்ளேயே நாங்கள் போகவில்லை.

பெங்களூரில் இருக்கும் 90 சதவீதம் பேர் தமிழர்கள், அவர்களை என்ன மாதிரி பார்க்கிறார்கள் அவர்கள் கன்னடர்கள். எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழனே, எங்கு வாழ்ந்தாலும் அயலான் அயலானே.

ஒருவர் ஏன் இனம் மாறுகிறார் அதில் இருந்தே தொடங்குகிறது ஏமாற்றம். ஏன் தமிழ் இனத்திற்கு மாற வேண்டும்.

மராட்டிய மாநிலத்தில் 26 இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தமிழர்களா மராட்டியர்களா? இனம், மொழி என்று பேசும் போது ஒருவர் நடுங்குகிறார் என்றால் அவர் மற்றொரு நிலத்தில் நிற்கிறார் என்பதே அர்த்தம்.

மலையாளிக்கு தெரிகிறது முல்லைப்பெரியாறு பிரச்சினை வந்தால் உடனே தமிழர்களை அடையாளம் கண்டு அடித்து விரட்டுகிறான்.

கன்னடருக்கு தெரிகிறது காவிரி நீர் பிரச்சினை வந்தால் உடனே தமிழனை விரட்டி அடிக்கிறான்.

வெள்ளைக்காரன் நாட்டை 300 ஆண்டுகள் ஆண்டதால் அவன் இந்தியன் ஆகி விட முடியமா? ஆண்பிள்ளையாக இருப்பவர் எல்லாம் என்னுடைய அப்பாவாகி விட முடியாது.

வெள்ளைக்காரன்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தான் தண்டவாளம் போட்டார்கள், அணை கட்டினார்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டினார்கள்.

8 கோடி தமிழனில் எவனுக்குமே தகுதியில்லை, யாருமே யோக்கியன் இல்லை என்பதைத் தான் சொல்ல வருகிறார்களா இவர்கள்.

அறத்தின் வழியில் ஆட்சி செய்த மறவர் கூட்டம் தமிழர் கூட்டம், எங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரத் தேவையில்லை.

நீங்கள் ஒதுங்கி இருந்தாலே போதும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். இவர் வந்து கட்சி தொடங்கி ஆட்சி செய்தால் நிச்சயம் அண்டை மாநிலங்கள் எங்களைப் பார்த்து காறி உமிழும். இப்போது சிரிப்பவர்கள் பின்னர் காறித் துப்புவார்கள்.

நடித்துவிட்டு ரசிகர்களின் கைதட்டல்களை வாங்கிவிட்டால் எளிதில் அரசியலுக்கு வந்துவிடலாம் என்பதே கீழ்த்தரமான பார்வை.

திரையுலகில் உள்ள புகழை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவேன் என்று சொல்வது சந்தர்ப்பவாதம் தானே என்று சீமான் கொந்தளித்துள்ளார்.

இதேவேளை, வரும் ஜனநாயகப் போரில் நமது படையும் இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக ரஜினி அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதையடுத்து ராகவேந்திரா மண்டபம் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.<