ஜனாதிபதியால் 27 வருடங்களுக்குப் பின் மீண்டும் கிடைத்த சொத்து
மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினரின் பாவனையிலிருந்த கட்டடம் சுமார் 27 வருடங்களின் பின்னர் இன்று உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தை கையளிக்க உதவிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒத்துழைப்பு வழங்கிய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மயிலம்பாவெளி - கருணாலயம் சுவாமி ராமதாஸ் நிறுவனத்தின் முகாமையாளர் ராஜதுரை முருகதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இக்கட்டடத்தை 1990ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரும் அதையடுத்து 2009ஆம் ஆண்டு முதல் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் போர் முடிவுற்ற பின்னர் தர்ம செயற்பாடுகளுக்காக சுவாமி ராமதாஸ் நிறுவனத்தின் இக்கட்டடத்தை மீள வழங்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இறுதியாக ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து தமது கோரிக்கையினை முன்வைத்ததையடுத்து கட்டடத்தை மீளக்கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கருணாலயம் சுவாமி ராமதாஸ் நிறுவனத்தின் முகாமையாளர் ராஜதுரை முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.