’மீண்டு வந்த பிரேசில்… மீண்டும் வீழும்’- வலதுசாரி ராணுவ அதிபரால் சிக்கல்

ஆசிரியர் - Admin
’மீண்டு வந்த பிரேசில்… மீண்டும் வீழும்’- வலதுசாரி ராணுவ அதிபரால் சிக்கல்

இயற்கையும் கொண்டாட்டமும் கால்பந்துமாக மட்டுமே அறியப்பட்ட பிரேசில் அதையும் தாண்டி பல காயங்களையும் தன் வரலாற்றுப் பக்கங்களில் கொண்டுள்ளது.

30 ஆண்டுகள்தான். ராணுவ சர்வாதிகாரத்தில் இருந்து பிரேசில் மீண்டு வந்து வெறும் 30 ஆண்டுகளே ஆகிறது. அதற்குள் மீண்டும் சர்வாதிகார பயம் பிரேசிலை சூழ்ந்துள்ளது. பிரேசிலின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கிறார் வலது சாரியும் முன்னாள் ராணுவத் தளபதியுமான ஜேர் போல்சானாரோ. இனவெறி, ஓரினச்சேர்கையாளர்கள் மீதான வெறுப்பு, மனிதம் மீதான வெறுப்பு என தனது சர்ச்சைக்குரிய பேச்சுகளால் பிரபலமானவர் போல்சானாரோ.

சுருக்கமாகச் சொல்வதென்றால், ‘மினி ட்ரம்ப்’. ஆம், அப்படித்தான் போல்சானாரோவை இந்த உலகம் அழைக்கத் தொடங்கியுள்ளது. இதை ஆமோதிக்கும் வகையில் போல்சானாரோவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் காட்டும் நெருக்கமும் ஒருவரை மாறிமாறி புகழ்ந்துகொள்வதையும் இந்த உலகம் கவனிக்காமல் இல்லை. 63 வயதான போல்சானாரோ பதவியேற்ற அடுத்த நொடி ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்த்துகள் அதிபர் போல்சானாரோ. மிகச்சிறப்பான தொடக்க உரை. அமெரிக்கா எப்போதும் உங்களுடன் இருக்கும்” எனப் பதிவிட்டார்.

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நின்றுகொண்டு, “கருத்தியல் தடைகளுக்குத் தடை ஏதும் இல்லாத பிரேசிலை மீட்டுக்கொடுப்பேன்” எனத் தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி நாற்காலியை இடதுசாரி அதிபர் வேட்பாளரை வீழ்த்திப் பெற்றார் போல்சானாரோ”. வெற்றி பெற்று பதவி ஏற்கையில், “கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி” என உறுதிமொழி எடுத்தார் புதிய அதிபர். பதவியேற்பு விழாவில் பிரேசிலின் ராணுவக் கொள்கையை முன்னிறுத்துவது ஜனநாயகத்தை காக்குமா அல்லது கட்டுப்படுத்துமா? என்ற கேள்வி சர்வதேச அரசியல் வல்லுநர்கள் மத்தியில் எழாமல் இல்லை.

போராடி ராணுவ சர்வாதிகாரத்திலிருந்து மீண்ட பிரேசில் தற்போது ஜனநாயக முறையிலேயே ஒரு சர்வாதிகாரியைத் தேர்ந்தெடுத்து அளித்துள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். பிரபல அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான நோம் சோம்ஸ்கி கூட பிரேசிலின் அரசியல் சூழ்நிலைகள் சிக்கலில் உள்ளதாகவே வெளிப்படுத்தி உள்ளார். 1985-ம் ஆண்டில் பெறப்பட்ட பிரேசிலின் சுதந்திரம் காக்கப்படுமா? பறிபோகுமா?

Radio
×