SuperTopAds

லிபியா வெளியுறவுத்துறை அமைச்சக கட்டிடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பலி.

ஆசிரியர் - Admin
லிபியா வெளியுறவுத்துறை அமைச்சக கட்டிடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பலி.

அராபிய வசந்தம் புரட்சியின் விளைவாக கடந்த 2011-ம் ஆண்டில் புரட்சியாளர்களால் லிபியா நாட்டின் அதிபர் தாக்கி கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு பின்னர் அங்கு ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்பதுபோல் பத்துக்கும் அதிகமான ஆயுதக் குழுக்கள் முளைக்க தொடங்கின. போதாக்குறைக்கு இஸ்லாமிய ஜிஹாதிகளின் ஆதிக்கமும் மேலோங்கி விட்டது. கூடுதலாக, சிரியா மற்றும் ஈராக்கில் முன்னர் ஆதிக்கம் செலுத்திய ஐஎஸ் பயங்கரவாதிகள் லிபியா நாட்டின் கடலோரப் பகுதி நகரமான சிர்டே என்னும் பெரிய ஊரை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தனர். அரசுப் படைகள் சுமார் 8 மாதங்கள் நடத்திய மூர்க்கத்தனமான போரில் இந்நகரம் மீட்கப்பட்டது.

எண்ணெய் வளம் மிக்க லிபியாவில் உற்பத்தியாகும் பெட்ரோல் மூலம் கிடைக்கும் வருமானத்தை அந்தந்த பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் பயங்கரவாதிகளும், ஜிஹாதி போராளிகளும் அனுபவித்து வருகின்றனர். இந்த தொழிலில் யார் பெரியவன்? என்ற போட்டியால் இந்த குழுவினர் மோதிக் கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. 

இந்த போட்டியில் கடந்த செப்டம்பர் மாதம் திரிபோலி நகரில் உள்ள பெட்ரோலிய துறை அமைச்சக அலுவலகத்தின் மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். பின்னர், அந்நாட்டின் தேர்தல் ஆணையர் அலுவலத்தின் மீது இவர்கள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், தலைநகர் திரிபோலியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக கட்டிடத்தின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். முதலில் கட்டிடத்தின் வாசலில் ஒரு கார் குண்டு வெடித்தது. வாசலில் காவலுக்கு இருந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தபோது கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு சூட்கேஸ் குண்டு வெடித்து சிதறியது. பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.