SuperTopAds

சிரியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்தும் படைகளை திரும்ப பெற அமெரிக்கா திட்டம்

ஆசிரியர் - Admin
சிரியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்தும் படைகளை திரும்ப பெற அமெரிக்கா திட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கத்தை ஒடுக்க 2001-ம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு முகாமிட்டன. இந்த படைகள் நடத்திய அதிரடி தாக்குதல்களில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டனர். 2014ம் ஆண்டு நேட்டோ படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டன.

எனினும் ஒரு சில பகுதிகளில் தலிபான்களின் ஆதிக்கம் இருந்தது. அவர்கள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தனர். எனவே, ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க படைகள் தொடர்ந்து அங்கு முகாமிட்டு தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.

தற்போது அமெரிக்க ராணுவ வீரர்களில் 14000 பேர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து, அந்நாட்டு வீரர்களுக்கு போர் பயிற்சியும், ஆலோசனைகளும் தாக்குதல்களுக்கு உதவியும் புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போதைய கள நிலவரத்தை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களில் பாதி பேரை திரும்ப பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இத்தகவலை பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக டிரம்ப் முடிவெடுத்தபோது ஆப்கானிஸ்தானில் உள்ள படைகளை திரும்ப பெறுவது குறித்தும் முடிவு எடுத்ததாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அநேகமாக கோடைக்காலத்தின்போது படைகள் திரும்ப பெறப்படலாம், ஆனால் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மற்றொரு அதிகாரி கூறியிருக்கிறார்.