தலைமறைவாக இருக்கும் 'விஜய் மல்லயாவை' இந்தியாவிடம் ஒப்படைக்கும் வழக்கில் நாளை தீர்ப்பு.
லண்டன்: இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மல்லையாவுக்கு எதிராக சில செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது.
இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன. இந்த வழக்கில் நாளை இறுதிகட்ட விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படும் எனவும், நாளைய தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் விரைந்துள்ளனர்.