அணு ஆயுத சோதனைகளை கைவிடப்போவதில்லை - வடகொரியா திட்டவட்டம்.!
ஐ.நா அவையின் கடும் எச்சரிக்கையை மீறி, வடகொரியா தொடர்ந்து அணு குண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதையடுத்து, வடகொரியா மீது பல்வேறு சுற்று பொருளாதார தடைகள் ஏற்கெனவே விதிக்கப்பட்டன. அவற்றையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
கடந்த நவம்பர் 19 ஆம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இதையடுத்து, வடகொரியா மீது புதிதாக மேலும் ஒரு பொருளாதார தடை விதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதன்படி, வடகொரியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை உலக நாடுகள் குறைத்துக் கொள்ளவதுடன், தங்கள் நாட்டில் உள்ள வடகொரிய தொழிலாளர்களை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் திருப்பியனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வடகொரியா விடுத்துள்ள அறிக்கையில் "அமெரிக்காவின் முயற்சியில் ஐ.நா விதித்துள்ள பொருளாதார தடை வடகொரியாவின் இறையாண்மை எதிரான நடவடிக்கை. கொரிய தீபகற்ப பகுதியில் போர் சூழலையும் உருவாக்கியுள்ளதுடன் அமைதியையும் சீர்குலைத்துள்ளது.
ஐ.நாவின் இந்த தீர்மானத்தை வட கொரியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் அணு ஆயுத சோதனையை, வடகொரியா கைவிட்டு விடும் என அமெரிக்க எண்ணுகிறது. ஆனால் அமெரிக்காவின் கனவு பலிக்காது. பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளோம். அதை கைவிட்டு விடும் பேச்சுக்கே இடமில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.