சசிகலாவை முந்திக்கொண்டு சட்டசபை போகும் முதல் மன்னார்குடி வாரிசு!
தினகரனின் கல கல பேட்டி- வீடியோ
முதல்வராக பொறுப்பேற்று அதன் பின்னர் போட்டியிட சசிகலா திட்டமிட்டார், தினகரனோ தேர்தல் களத்தை சந்தித்துவிட்டு அதன் பின்னரே சட்டசபை செல்வேன் என்று உறுதியாக இருந்து போட்டியிட்டு தற்போது தேர்தலில் தொடர்ந்து 4 சுற்றுகளிலும் முன்னிலையில் உள்ளார் தினகரன். 4 சுற்றுகளிலேயே சுமார் 11 ஆயிரத்து 816 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகிக்கிறார். அதிமுகவில் மறைமுகமாக ஆட்சி செலுத்தி வந்த மன்னார்குடி குடும்பத்தின் முதல் நபராக சட்டசபைக்கு நேரடியாக செல்லும் நபராக மாறியுள்ளார் டிடிவி. தினகரன்.
இதுவரையில் சசிகலா குடும்பத்தின் மறைமுக ஆதிக்கமானது அதிமுகவிலும், ஆட்சியிலும் இருந்ததாக சொல்லப்பட்டு வந்தது. ஜெயலலிதாவை பின்னால் இருந்து சசிகலா தான் இயக்குகிறார் என்றெல்லாம் தொடர்ந்து கூறப்பட்டது. அதிகாரிகள் நியமனமானாலும், வேட்பாளர்கள் தேர்வானாலும் சசிகலாவின் ஆதிக்கம் மற்றும் மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் என்பது இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாகவே ஜெயலலிதா மறைவையடுத்து சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்க காலில் விழுந்து கேட்டு கொண்டனர் அதிமுகவின் நிர்வாகிகள்.
முதல்வராக திட்டம் போட்ட சசிகலா
இதனையடுத்து டிசம்பரில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா, பிப்ரவரியில் முதல்வராவதற்கான பணியில் இறங்கினார். சசிகலாவை முதல்வராக முன்மொழிந்து ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்ட போதும் ஆட்சியமைக்க கோராமல் தாமதப்படுத்தி வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுவிட தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறின
10 ஆண்டுகள் போட்டியிட முடியாது
ஆட்சிக்கு வர நினைத்தற்காகவே சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டே ஒதுக்கி வைக்க டெல்லியில் இருந்து திட்டம் அரங்கேற்றப்பட்டது. சசிகலா இன்னும் 10 ஆண்டுகள் போட்டியிட முடியாது என்ற நிலையில் கடந்த முறை சசிகலாவின் ஆதரவுடன் வேட்பாளராக களமிறங்கினார் தினகரன்.
சசிகலா ஆதரித்தாரா தினகரனை
ஆனால் இந்த முறை தினகரனை சசிகலா வேட்பாளராக முன்மொழிந்தாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்து வருகிறது. சசிகலாவின் கணவர் நடராஜனும் தினகரன் போட்டியிட சசிகலா ஆதரவு தெரிவித்தாரா என்பது அவர் சொன்னால் ஒழிய தெரியாது என்று கூறி இருந்தார்.
தினகரனுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு
ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் இளவரசியின் வாரிசுகளின் எதிர்ப்பு, நடராஜனின் எதிர்ப்பு என குடும்பத்தினர் பலரின் எதிர்ப்பை மீறித் தான் தினகரன் தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் இன்று அவர் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.
16 அடி பாய்ந்த தினகரன்
சசிகலா எட்டடி பாய திட்டமிட்டால், அவரை முந்திக் கொண்டு 16 அடி பாய்ந்து சட்டசபைக்கு செல்கிறார் மன்னார்குடியின் முதல் எம்எல்ஏவாக, அதுவும் சுயேச்சை எம்எல்ஏவாக. கடந்த 1994ம் ஆண்டு முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் பெரியகுளம் லோக்சபா தொகுதியின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது