பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பை ஒடுக்க அமெரிக்கா புதிய செயல் திட்டம்!
பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, தெஹ்ரிக் ஐ தலிபான் பாகிஸ்தான் ஆகிய 2 தீவிரவாத அமைப்புகளும், இந்தியாவில் செயல்பட்டு வந்த பாபர் கல்சா தீவிரவாத அமைப்பும் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தீவிரவாத தடுப்பு செயல்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாத அமைப்புகள், அவைகளை ஒடுக்க அமெரிக்கா எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்த புதிய தேசிய தீவிரவாத தடுப்பு செயல் திட்ட அறிக்கையை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஐஎஸ்ஐஎஸ், அல் கொய்தா ஆகிய முக்கிய தீவிரவாத அமைப்புகளுடன், 12க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் ஊடுருவவும், பயங்கரவாத பிரசாரங்களை முன்னெடுக்கவும் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில் அமெரிக்க மக்களுக்கும், வெளிநாட்டு நலன்களுக்கும் அவைகள் அச்சுறுத்தலாக உள்ளன.
இந்த தீவிரவாத குழுக்களில் இடம் பெற்றுள்ள போகோ ஹராம், தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான், லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் உள்ளூர் அரசாங்கத்தை கவிழ்க்கவும், தாக்குதல்களை நடத்தவும் பல்வேறு அரசியல் மற்றும் தீவிரவாத தந்திரங்களை மேற்கொள்கின்றன. இந்த தந்திரங்கள் மூலம் உள்ளூர் இலக்குகளை ஏறக்குறைய நிறைவேற்றிய பிறகு, அடுத்ததாக அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்தக்கூடும்.
ஏனெனில், இதில் பல்வேறு குழுக்களும் அல்கொய்தா, ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதுடன் உலகெங்கிலும் அமெரிக்காவுக்கு விரோதமான அனுதாபிகளின் ஆதரவையும் கொண்டுள்ளன. இந்த குழுக்கள் பலவீனமான அரசுகள், மோதல்கள், நிலைத்தன்மை இல்லாததையும், மத குறைகளையும் பயன்படுத்தி, பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் மேற்கத்திய செல்வாக்கை அகற்றுவதற்கான தங்களின் இலக்கை நோக்கி முன்னேற செயல்பட்டு வருகின்றன.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வெளிநாட்டு தாக்குதல்களை தொடங்க போதிய நிதி ஆதாரத்தை தக்க வைத்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தாக்க வேண்டுமென அந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அமெரிக்கா தலைமையிலான தீவிரவாத தடுப்பு நடவடிக்கையால் அல்-கொய்தாவின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும், அதன் துணை அமைப்புகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்து வருகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாபர் கல்சா அச்சுறுத்தல்
அமெரிக்காவின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை திட்ட அறிக்கையில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய தீவிரவாத அமைப்பான பாபர் கல்சாவும் இடம் பெற்றுள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்பும், அச்சுறுத்தல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நாசவேலையில் ஈடுபடா விட்டாலும், மற்ற நாடுகளில் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்கும் முயற்சிகளை இந்த அமைப்பு செய்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தலிபான்களை ஒடுக்க பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்
பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மம்மூத் குரேஷி சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு 10 நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, அமெரிக்காவின் ராணுவம் பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டு, அங்கு தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று குரேஷி கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, அமெரிக்காவின் மத்திய கமாண்டர் ஜெனரல் ஜோசப் வோட்டல் கூறுகையில், ‘‘ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை குறைக்கும் நடவடிக்கையில், பாகிஸ்தான் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. தலிபான்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட வேண்டும். தீவிரவாதத்தை வேரறுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வந்தாலும், அங்கு தொடர்ந்து தீவிரவாதம் இருப்பது தெரிய வருகிறது. அதையும் முற்றிலும் அழிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.” என்று தெரிவித்தார்.