பாலியல் வன்முறைக்கு எதிராக போராடும் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஆசிரியர் - Admin
பாலியல் வன்முறைக்கு எதிராக போராடும் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

பாலியல் வன்முறைக்கு எதிராக போராடும் காங்கோ டாக்டர் டெனிஸ் மக்வெஜ், ஈராக்கின் யாசிடி இன பெண் ஆர்வலரான நாடியா முராடுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 

இதில், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் நேற்று அறிவிக்கப்பட்டது. மிக உயரிய இவ்விருதுக்கு 131 பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், காங்கோ டாக்டர் டெனிஸ் மக்வெஜ், ஈராக்கின் யாசிடி இன பெண் ஆர்வலரான நாடியா முராட் ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நோபல் கமிட்டி தலைவர் பெரிட் ரெய்ஸ் ஆண்டர்சன் கூறுகையில், ‘‘போரில் பாலியல் வன்முறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வர மக்வெஜும், முராடும் மேற்கொண்ட முயற்சிக்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது’’ என்றார்.

சிரியா எல்லையை ஒட்டியுள்ள ஈரானின் சின்ஜார் நகரை சேர்ந்த யாசிடி இனத்தை சேர்ந்தவர் 25 வயது பெண் நாடியா முராட். இவர், கடந்த 2014ல் சின்ஜார் நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய போது பாலியல் அடிமையாக மொசூலுக்கு கடத்திச் செல்லப்பட்டார். அங்கு 3 மாதங்கள் தீவிரவாதிகளால் கூட்டு பலாத்காரம், பாலியல் வன்முறை, தாக்குதல்களுக்கு ஆளாகி தப்பி வந்தார். அதன்பிறகு, போரினால் ஆண்கள் கொல்லப்படும் நிலையில், பெண்கள் எந்தளவுக்கு பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள், சிறுவர், சிறுமிகளுக்கு நேர்ந்திடும் கொடுமைகள் குறித்து உலகிற்கு முராட் வெளிப்படுத்தினார். மேலும், தனது யாசிடி இன மக்களுக்காகவும், போரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாலியல் அடிமைகளுக்கான ஐநா.வின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார்.

காங்கோ நாட்டை சேர்ந்த 63 வயதான டாக்டர் டெனிஸ் மக்வெஜ், கடந்த 20 ஆண்டுகளாக பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனது மருத்துவ சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு அளித்து வருகிறார். பலமுறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட இவர், கடந்த 1999ம் ஆண்டு தெற்கு கிவு பகுதியில் மருத்துவமனையை நிறுவினார். அதில், போரில் பலாத்கார வன்முறைக்கு ஆளாகும், பெண்கள், சிறுமிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். பெண்களுக்கு எதிராக தீவிரவாதிகள் நடத்தும் கொடூரங்களை விவரிக்கும் இவர், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட சுமார் 3,500 பெண்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறார். மக்வெஜ், முராட் இருவருக்கும் வரும் 10ம் தேதி ஓஸ்லோவில் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. வரும் 8ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு