பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவையும் தாக்கியது மங்குத்; 24 லட்சம் பேர் பாதிப்பு
பிலிப்பைன்சில் 49 பேரின் உயிரை பறித்த மங்குத் புயல், நேற்று சீனாவையும் தாக்கியது. பிலிப்பைன்சின் பல பகுதிகளை நேற்று முன்தினம் தாக்கிய ‘மங்குத்’ புயல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.
புயலால் ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவுகள் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் சேதமடைந்து உள்ளன. பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. பிலிப்பைன்சில் இந்தப் புயல் பாதிப்பால் 49 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காணவில்லை. 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புயல் பிலிப்பைன்சில் இருந்து நகர்ந்து, ஹாங்காக்கையும் தெற்கு சீனாவையும் நேற்று தாக்கியது. சீனாவின் குவாங்டங் மாகாணத்தின் ஜியாங்மென் நகரில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், 24 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.
48 ஆயிரம் படகுகள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. 2 விமான நிலையங்களில் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 632 சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக, குவாங்டங், ஹைனன் மற்றும் குவாங்சி சுவாங் பகுதிகளில் மணிக்கு 162 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.