ஏழு தமிழரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம்;சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
ஏழு தமிழரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் மனதில் உட்கார்ந்து விட்டார்கள் சுப்ரீம் கோர்ட் நீதியரசர்கள் மூவர். நீண்ட காலமாக நடந்து வந்த வழக்கு ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் வழக்கு ஆகும். 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.
குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு குறித்த இறுதி தீர்ப்பினை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன்சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று அதிரடியாக உத்தரவிட்டது.
இதையடுத்து 7 பேரின் விடுதலையும் கிட்டத்தட்ட பிரகாசமாகி விட்டது. இந்த நேரத்தில் நீதிபதிகள் 3 பேரும் உலகத் தமிழர்களின் மனதில் ஒரு சேர இடம் பிடித்து விட்டனர்.
மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய்தான் அடுத்து தலைமை நீதிபதியாகப் போகிறார் என்பது நினைவிருக்கலாம். 7 பேரின் விடுதலைக்கு இருந்த தடையை நீக்கியதன் மூலம் இந்த 3 பேரும் உலகத் தமிழர்களால் என்றென்றும் நினைவு கூறப்படுவர் என்பது உறுதி.