SuperTopAds

இந்திய இழுவை படகுகளை விடுவிக்க முடியாது. ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
இந்திய இழுவை படகுகளை விடுவிக்க முடியாது. ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு..

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை அரசுடமையாக்கும் கட்டளையை மறு ஆய்வு செய்து அவற்றை விடுவிக்க கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்தது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிவந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த ஜூன் மாதம் நெடுந்தீவு பகுதியில் வைத்து இந்திய மீனவர்களது 3 இழுவைப் படகுகள் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டன. அவற்றில் தொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால், ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

எனினும் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய படகுகளை கடல்வள பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குமாறு கடந்த 28ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

இந்த நிலையில் தமிழகத்திலிருந்து வருகைதந்த படகுகளின் உரிமையாளர்கள், மன்றின் கட்டளையை மறு ஆய்வு செய்து படகுகளை விடுவிக்குமாறு கோரி மன்றில் விண்ணப்பம் செய்தனர். படகுகளின் உரிமையாளர்கள் சார்பில் சட்டத்தரணி திருமதி ஜோய் மகிழ் மகாதேவாவால், இந்த விண்ணப்பத்தை முன்வைத்தார்.

விண்ணப்பத்தை நிராகரித்த ஊர்வாற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், மன்றிக் கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

“படகுகளின் உரிமையாளருக்கான கால அவகாசம் சட்டத்தின் ஏற்பாடுகளில் குறிப்பிட்டதையும் விட அதிகமாகவே நீதிமன்றால் வழங்கப்பட்டிருந்தது. உரிய கால எல்லைக்குள் யாரும் உரிமை கோர முன்வரவில்லை. அதனால்தான் படகுகளை அரசுடமையாக்க மன்று கட்டளை வழங்கியது” என்று நீதிவான் சுட்டிக்காட்டினார்.