31 ஆண்டுக்கு முன் மாயமான ரஷ்ய வீரர் மெழுகு பொம்மை போல் பனிமலையில் இருந்து மீட்பு
பல ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலையேறும் வீரரின் உடல், பனிக்குள் இருந்து மெழுகு பொம்மை போல் மீட்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையாக எல்பிரஸ் விளங்குகிறது. இது தெற்கு ரஷ்யாவில் அமைந்துள்ளது. இந்தப் பனிமலை மீது, கடந்த 1987ஆம் ஆண்டு 7 பேர் கொண்ட ரஷ்ய குழுவினர் ஏறினர். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேரும் உயிரிழந்தனர்.
அவர்களைத் தேடும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதனால் மீட்பு பணி கைவிடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் சுற்றுலா பயணிகள் குழுவாக எல்பிரஸ் மலைக்கு சென்றுள்ளனர். அப்போது 1987ஆம் ஆண்டு பனிச்சரிவில் உயிரிழந்த 7 பேரில் ஒருவரான எலினா பஸிகினாவின் உடலை கண்டெடுத்துள்ளனர்.
பனி மலைக்குள் சிக்கியதால், அவரது உடல் பதப்படுத்தியது போன்று, மெழுகுச் சிலை தோற்றத்துடன் கிடைத்துள்ளது. இதுகுறித்து உடனே மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
எலினாவின் உடலுடன், அவரது ரஷ்ய பாஸ்போர்டும், 10 ஏப்ரல் 1987 தேதியிட்ட ஏரோபிளாட் விமான டிக்கெட்டும் கிடைத்துள்ளது. இது அவரது குடும்பத்தாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய அவரது உறவினர், எலினா எங்காவது உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். அவளைக் காண 30 ஆண்டுகள் ஆகியுள்ளது என்றார். எலினா திருமணம் ஆகாதவர். மாஸ்கோ அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மலைகள் மீது அதீத ஆர்வம் உண்டு.