SuperTopAds

பெர்முடா முக்கோணத்தில் எல்லாம் தொலைவது ஏன்? மர்மம் உடைத்த பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்

ஆசிரியர் - Admin
பெர்முடா முக்கோணத்தில் எல்லாம் தொலைவது ஏன்? மர்மம் உடைத்த பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்

பெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் உள்ள மர்மமான கடல் பகுதி. பெர்முடாவில் இருந்து மியாமிஇ பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் முக்கோணப்பகுதி தான் பெர்முடா முக்கோணம்.

கடந்த 500 வருடங்களில் 50 கப்பல், 20 விமானம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் இந்த முக்கோணத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி பெர்முடா முக்கோணத்திற்கு மேல் பறந்த அமெரிக்காவின் 5 போர் விமானங்கள் மாயமான பின்பு தான், பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல்கள் உலகம் முழுக்க பரவியது.

கடைசியாக கடந்த ஆண்டு 4 பேருடன் சிறிய ரக விமானம் ஒன்று காணாமல் போனது. அங்கே ஆண்டொன்றுக்குச் சராசரியாக 4 விமானங்கள் முதல் 25 க்கும் மேற்பட்ட படகுகள் வரை காணாமல் போகின்றன. அவை ஏன் காணாமல் போகின்றன? எங்கே அவற்றை மீட்டெடுப்பது என்பது குறித்து இதுவரையிலும் கண்டறியப்படாமலே இருந்து வந்தது.

பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தாண்டி வான்வெளிகளையும், வேற்று கிரகங்களையும் அலசி பார்க்க முடிந்த நமது அதிநவீன அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியால், பூமியில் சுமார் 7,00,000 சதுர கிலோமீட்டர்களுக்கு மட்டுமே பரந்து விரிந்து கிடக்கும் கடல்பகுதியான பெர்முடா முக்கோணத்தை பற்றிய சரியான தெளிவை பெற முடியாமல் இருந்து வந்தது.

விஞ்ஞானிகள் ஒரு பக்கம் மண்டையை உடைத்து யோசித்து கொண்டிருந்தாலும், அங்கு மர்ம சக்தி உள்ளது அதனாலே, கப்பல் மற்றும் விமானங்கள் காணாமல் போகின்றன என கதை கட்டியவர்களும் உண்டு. அறிவியலுக்கு விஞ்சியது உலகில் ஒன்றும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பிரிட்டனை சேர்ந்த கடலியலாளர்கள் இந்த மர்மத்தை உடைத்துள்ளனர்.

டாக்டர் சைமன் போக்ஸால் என்பவரது தலைமையிலான குழு பெர்முடா முக்கோணம் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பெர்முடா முக்கோண கடல் பகுதியில் மற்ற கடல் பகுதிகளை விட மிகப்பெரிய அலைகள் எழுவதே கப்பல்கள் மூழ்குவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 அடி (30 மீட்டர்) உயர்த்துக்கு இயல்பாகவே அந்த பகுதியில் அலைகள் எழும்புகின்றன. 100 அடி உயரம் என்றால் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அந்த உயரத்தை எட்டும் வண்ணம் ராட்சச அலைகள் வெகு சாதாரணமாக முக்கோணப்பகுதியில் அடிக்கும்.

மற்ற கடல் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட சீற்றத்தின் போது கூட இந்த அளவுக்கு அலைகள் உயர எழுந்தது இல்லை. ஆனால், பெர்முடா முக்கோண பகுதியில் எப்போதும் இதே உயரத்தில் அலை அடிக்கிறது. இந்த அலைகள் மத்தியில் கப்பல் மற்றும் படகுகள் செல்வது சாத்தியமே இல்லை. இதனால், அங்கு செல்லும் அனைத்துமே மூழ்குகின்றது.

கடந்த 1995-ம் ஆண்டு முக்கோண பகுதியில் அலைகள் 18.5 மீட்டர் அளவுக்கு வீசியது சேட்டிலைட்டில் பதிவாகியிருந்தது குறிப்பிடதக்கது. மற்ற கடல் பகுதியை விட இந்த பகுதியில் கடல் நீரில் உள்ள அழுத்தம் அதிகமாக இருப்பது படகுகள் மற்றும் கப்பல்கள் உடைவதற்கு காரணமாக உள்ளது.

12 மீட்டர் உயரத்தில் வீசக்கூடிய அலைகள் 8.5 பிஎஸ்ஐ அழுத்தத்தை கொண்டிருக்கும். இதனால், 21 பிஎஸ்ஐ அழுத்தத்தை தாங்கும் விதமாக படகு மற்றும் கப்பல்கள் கட்டப்படுகின்றன. ஆனால், பெர்முடா முக்கோணப்பகுதியில் உள்ள கடல் அலையின் அழுத்தம் 140 பிஎஸ்ஐ அளவாகும்.

சராசாரி கடல் அலை அழுத்தத்தை விட பெர்முடா முக்கோணத்தில் 180 சதவிகிதம் அதிகமாக உள்ளது. இந்த அழுத்தமே கப்பல் மற்றும் படகுகள் நொறுங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. எவ்வளவு உறுதியாக கப்பல் கட்டினாலும் பெர்முடா முக்கோணத்தில் உள்ள அழுத்ததை தாங்க முடியாது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்முடா முக்கோண கடற்பரப்பில் நிலவும் சீதோஷன நிலை விமானங்கள் பறப்பதற்கு முற்றிலும் சரிவராத பகுதி எனவும் கூறப்பட்டுள்ளது.

அலைகள் உயரமாக எழுவதற்கும் அழுத்தம் அதிகமாக இருப்பதற்கும் என்ன காரணம் என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தின் இயல்பு காரணமாகவே மேற்கண்டவை நடக்கிறது. அப்பகுதியில் நிலவும் வானிலை மாற்றங்களும் கடலுக்கடியிலான நில அமைப்புமே காரணம் எனவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.