மீண்டும் புதிய ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா: - அமெரிக்கா குற்றச்சாட்டு
வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் அமெரிக்காவும், ஐ.நாவும் வடகொரியா மீது கடும் பொருளாதார தடை விதித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவானது. கொரிய தீபகற்பத்தில் போர் சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே பதட்டத்தை தணிக்க கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை முற்றிலும் அழிப்பதாக வடகொரியா ஒப்புக் கொண்டது. மேலும் அவற்றை அழிப்பது போன்ற மாயையும் ஏற்படுத்தியது. ஆனால் இதை அமெரிக்கா நம்பவில்லை.
வட கொரியா மீது உளவு செயற்கைகோளை பறக்க விட்டு அதன் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. அப்போது அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வருவது நிறுத்தப்படவில்லை என தெரியவந்தது. எனவே அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்படும் வரை வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
எச்சரிக்கையும் மீறி வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகள் தயாரிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் பியாங் யாங் அருகேயுள்ள சனும்டாஸ் என்ற இடத்தில் வைத்து அவை தயாரிக்கப்படுவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே வடகொரிய தொழிற்சாலைகள் தொடர்ந்து அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்க உள்துறை மந்திரி மைக்பெம்போ குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது