பல முனை நெருக்கடியில் ஓ.பன்னீர் செல்வம்.. ஆதரவாளர்கள் அதிர்ச்சி!

ஆசிரியர் - Editor II
பல முனை நெருக்கடியில் ஓ.பன்னீர் செல்வம்.. ஆதரவாளர்கள் அதிர்ச்சி!

துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு இது மிகவும் சோதனையான காலம். கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் அவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தர்ம யுத்தம் நடத்தி அதன் மூலம் மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கை உயர்த்திக் கொண்டவர் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் அவர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் சமரசம் செய்துகொண்டு மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடித்தது முதலே பழைய செல்வாக்கை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இணைப்புக்குப் பிறகு பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் கிடைத்தது போக, அவரது ஆதரவாளர்களுக்கு இதனால் பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் பதவி கேட்டு அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பன்னீர்செல்வத்தை நச்சரித்து வருகிறார்கள். அந்தக் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதைப் பெறலாம் என்ற நோக்கத்தில் தான் சமீபத்தில் டெல்லி சென்றார் பன்னீர்செல்வம் என்ற யூகங்கள் மீடியாக்களில் வெளியாகியிருந்தன.

எம்எல்ஏவாக இருந்த போது பிரதமர் மோடியை சந்திக்க முடிந்த பன்னீர்செல்வத்தால் துணை முதல்வர் என்ற அந்தஸ்துடன் டெல்லி சென்ற போது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை கூட சந்திக்க முடியவில்லை. இந்த வேதனையை பன்னீர்செல்வமும் உறுதி செய்தார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி இதற்கு ஒரு உதாரணம்.

பிரதமர் மோடியின் முயற்சியால் தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று ஏற்கனவே பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனால் பாஜக மேலிடம் பன்னீர்செல்வம் மீது வருத்தத்தில் இருந்த நிலையில் தனது சகோதரருக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் கொடுத்து நிர்மலா சீதாராமன் உதவி செய்ததாக பன்னீர்செல்வம் அளித்த பேட்டி பாஜக தலைமையை இன்னும் சூடாக்கிவிட்டது. பன்னீர்செல்வம் இந்த தகவலை கூறும் முன்பாக முதலில் இதை வண்டலூரில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் எடப்பாடிதான் நிர்மலா சீதாராமன் செய்த உதவி பற்றி, தெரிவித்தார். அதை பன்னீர்செல்வத்தின் டெல்லி பேட்டி மறக்கடித்துவிட்டது. பாஜக கோபம் பன்னீர்மீதுதான் திரும்பியது.

ஓ.பன்னீர்செல்வத்தின் மிகப்பெரிய பலமே மத்திய பாஜகவில் அவருக்கு இருக்கும் செல்வாக்குதான். சமீபத்தில் லோக்சபாவில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அக்கட்சித் தலைவர் அமித் ஷா பன்னீர்செல்வத்தை தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டார். ஆனால் டெல்லியில் பன்னீர்செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் திருப்பி அனுப்பி இருப்பதன் மூலம் பாஜகவில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு சரியத் தொடங்கியுள்ளது என்றே தோன்றுகிறது.

இது ஒருபக்கம் என்றால் திமுக மற்றும் அறப்போர் இயக்கம் ஆகியன தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் ஓ பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது. ஆனால் தமிழக அரசோ லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு அதை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே சிபிஐ விசாரணையை தவிர்க்கவாவது, தமிழக முதல்வரின் உதவி கண்டிப்பாக பன்னீர்செல்வத்திற்கு தேவைப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், முதல்வருக்கு எதிராக அவரால் கறாராக பேச முடியாது. கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும், தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை பெற்று தருவது என்பது பன்னீர்செல்வத்திற்கு, இயலாத காரியமாகி விட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆதரவு இல்லாத நிலைக்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டுள்ள சூழலால், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு