பெண்களை வாக்களிக்க அனுமதிக்காத பாகிஸ்தானின் விசித்திர கிராமங்கள்
ஒரு காலத்தில் தாலிபன்கள் வலுவாக இருந்த பகுதி இந்த டிர். அங்கு பெண்களுக்கென வெகு சொற்ப உரிமைகளே இருந்தன. அவர்களுக்கு அப்போது தேர்தலில் போட்டியிட அல்ல வாக்களிக்கவே உரிமைகள் மறுக்கப்பட்டன.
இம்ரான்கானின் கட்சியான பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியின் (பி.டி.ஐ) சார்பாக அவர் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஹமிதா வீட்டிலிருந்து வெளியே வந்த மறுகணமே 'வாழ்க பி.டி.ஐ' என்ற கோஷம் உரக்க கேட்கிறது. அங்கு குழுமி இருக்கும் ஆண்கள்தான் இந்த கோஷத்தை எழுப்புகிறார்கள். சில பள்ளி மாணவர்கள் அங்கு சில நிமிடங்கள் நின்று, அங்கு நடக்கும் காட்சிகளை பார்க்கிறார்கள்.
"ஒரு பெண்ணால் தேர்தலில் வாக்களிக்க முடியுமென்றால், அவரால் தேர்தலில் போட்டியிடவும் முடியும்தானே? இந்த நினைப்புதான் என்னை தேர்தலில் போட்டியிட தூண்டியது" என்கிறார் ஹமீதா.
கடந்த ஆண்டு, டிர் பகுதியில் நடந்த தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்ள மறுத்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம். அதற்கு காரணம் அந்த தேர்தலில் எந்த பெண்ணும் வாக்களிக்கவில்லை என்பதுதான்.
அந்த நாட்டு சட்டத்தின் படி, தேர்தல் நடைபெறும் தொகுதியில் குறைந்தது 10 சதவீத பெண்களாவது வாக்குபதிவு செய்து இருக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் செல்லும்.
"நான் கட்சி வித்தியாசம் இல்லாமல் பெண்களை சந்திக்கிறேன். அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்துவிட்டு போகட்டும். ஒரு பெண் இந்த தொகுதியில் போட்டி இடுகிறார். உங்கள் வாக்கு யாருக்கு என்று கேட்கிறேன்? அவர்கள் 'எங்கள் வாக்கு உங்களுக்குதான்' என்கிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்ததால் சந்தோஷமாக இருக்கிறார்கள். இப்போது இந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்" என்கிறார்.
பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல்முறையாக இப்போதுதான் டிர் தொகுதியில் பெண் ஒருவர் போட்டியிடுகிறார்.
அவருடைய கட்சியின் ஆண் ஆதர்வாளர்கள் பி.டி.ஐ கட்சி கொடியில் உள்ள வண்ணங்கள் நிறைந்த கழுத்துத் துண்டு ஒன்றை அளித்து இருக்கிறார்கள். அதனை அவர் அணிந்து, தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்.
ஆனால், எல்லா இடத்திலும் இப்படியான நிலை இல்லை. பாகிஸ்தானில் வளர்ச்சி அடைந்த பகுதிகளில் கூட பெண்கள் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை விதித்தது ஆண்களும், உள்ளூர் பெரியவர்களும்.
பெண்கள் தேர்தலில் வாக்களிப்பது தடுக்கப்பட்டது பழமைவாத டிர் பகுதியில் மட்டுமல்ல. அது அந்நாடெங்கும் நடக்கிறது, பாகிஸ்தானின் வளர்ந்த மாகாணமாக கருதப்படும் பஞ்சாபிலும் கூட பெண்கள் வாக்களிவிடாமல் தடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத்திலிருந்து 150 கி.மீ தொலைவில் இருக்கிறது துர்னல் கிராமம். இந்த கிராமத்திற்கு என்று ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. ஆனால், அது மகிழ்ச்சி அளிக்கும் பாரம்பரியம் அல்ல. ஆம், அந்த பகுதியில் பெண்கள் பல காலமாக தேர்தலில் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
1962 ஆண்டு தேர்தலில் நீண்ட வரிசையில் பெண்கள் வாக்களிக்க நின்று கொண்டிருந்த போது அவர்களுக்குள் சச்சரவு ஏற்பட்டது. இதனால் தங்கள் கெளரவம் போய்விட்டதாகவும், பெரும் அவமானம் நிகழ்ந்துவிட்டதாகவும் நினைத்த ஆண்கள், பெண்கள் தேர்தலில் வாக்களிக்க தடை விதித்தனர்.
அரை நூற்றாண்டு காலம் ஆகி இருந்தாலும், இன்றும் அந்தப் பகுதியில் தடை நீடிக்கிறது.
துர்னல் கிராமம் மிக ரம்மியமான பகுதி. அந்தப் பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அங்கு பெரும் பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது.
வீடுகளும் விஸ்தாரமாக இருக்கிறது. வீடுகளும் நவீனமாக கற்கள், சிமெண்ட் கொண்டு கட்டப்பட்டு இருக்கின்றன. சராசரி விவசாய கிராமத்தை விட இந்த துர்னலில் கல்வி அறிவும் அதிகமாகதான் இருக்கிறது.
தேர்தல் வாக்களிக்க விரும்பும் ஒரு பெண்ணை அந்த கிராமத்தில் சந்தித்தேன். அவரிடம் உரையாடும் போது அவரது பதற்றத்தை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
அந்த சமூக அழுத்தம் அதிகமாக இருக்கும் காரணத்தால், அந்த பெண் தன்னுடைய உண்மையான பெயர் பிரசுரம் ஆகிவிடக் கூடாது என்று விரும்பினார். அதன் காரணமாக அவரது பெயரை மாற்றி உள்ளோம்.
என் வாழ்நாளில் எந்த பெண்ணும் வாக்களித்ததை நான் கண்டதே இல்லை. எங்கள் கிராமத்து ஆண்கள் தங்கள் வீட்டு பெண்களை வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். இது இங்கு ஒரு பண்பாடாகவே மாறிவிட்டது என்கிறார் இராம். அவரது முகம் முழுவதும் முக்காடிடப்பட்டி இருக்கிறது. அவரது கண்கள் மட்டுமே வெளியே தெரிகின்றன.
மேலும் அவர், "இங்கு சில ஆண்கள் மனதில் நினைத்தால் கூட, தைரியமாக தங்கள் வீட்டு பெண்களை வாக்களிக்க அனுப்ப மாட்டார்கள். ஏனெனில் அவரும் இந்த சமூகத்தில் வாழ வேண்டும்தானே" என்கிறார்.
இதன் காரணமாகதான் கடந்த தேர்தலில் 17 வாக்குச் சாவடிகளில் ஒரு பெண் கூட வாக்களிக்கவில்லை. ஆனால், இராம் இதனை மாற்ற வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார். அவர் ஒரு அரசு சாரா அமைப்புடன் இணைந்து, தனது வீட்டில் ரகசியமாக பெண்கள் குழுவை திரட்டி, வாக்களிப்பதன அவசியம் குறித்து ஒரு கலந்தாலோசனை கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.
வளர்ச்சிக்கான போடொஹர் அமைப்பின் மண்டல மேலாளராக இருக்கிறார் நஹிதா அப்பாஸி.
அவர் கடந்த ஆண்டுகளாஜ்க அந்த கிராம ஆண்களிடம் பெண்களை வாக்களிக்க அனுப்பும்படி பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், எதுவும் பலன் தரவில்லை. இந்த பழமைவாத கிராமத்தில் பெண்களுடன் உரையாடுவது அவருக்கு பெரும்தடையாக இருக்கிறது. அவருக்கு அந்த கிராமத்தை சேர்ந்த இராம்தான் உதவி வருகிறார்.
நஹிதா கைகளில் ஒரு தட்டி வைத்திருக்கிறார். அதில், "ஓட்டு சீட்டு உங்களுடைய சக்தி, உங்களுடைய எதிர்காலம் அதில்தான் இருக்கிறது" என்று பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டு இருக்கிறது. அங்கு கூடி இருக்கும் பெண்களிடம் தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்குகிறார்.