பாகிஸ்தான் தேர்தல் - இம்ரான் கான் கட்சி எட்டு தொகுதிகளில் வெற்றி
பாகிஸ்தான் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் முன்னிலை வகிக்கிறார்.
ஆனால், வாக்கு எண்ணிக்கையில் பெரியளவில் மோசடி நடப்பதாக அரசியல் போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
11:40 AM: இதுவரை வெளிவந்துள்ள 17 தொகுதிகளுக்கான அதிகாரபூர்வமற்ற முடிவுகளில், 10இல் வெற்றிபெற்று இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும், பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலா மூன்று தொகுதிகளிலும், மீதமுள்ள ஒரு தொகுதியில் சுயேட்சையும் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அதிகாரபூர்வமற்ற முடிவுகள் தெரியவந்துள்ள 12 தொகுகளில் 8இல் வெற்றிபெற்று இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும், மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஒரு தொகுதியில் முத்தஹீதா மஜ்லிஸ் இ-அமல் கூட்டணியும் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தேர்தல் முடிந்து 10 மணி நேரம் ஆகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனால் அங்குள்ள அரசியல் கட்சிகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் தேர்தலில் பல சர்ச்சைகள் இருந்து வரும் நிலையில், முடிவுகள் அறிவிப்பு தாமதமானது.
"வாக்கு எண்ணிக்கையில் சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்னால் எந்த சதியும் இல்லை" என பாகிஸ்தான் தேர்தல் ஆணைய செயலாளர் பாபர் யாகூப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற 2018 பொதுத்தேர்தலில், வாக்குப்பதிவு முடிந்து 10 மணி நேரத்துக்கு பிறகு, முதல் தேர்தல் முடிவுகளை மட்டும் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ராவல்பிண்டியில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி வேட்பாளரான முகமது அட்னான் முன்னிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள், இம்ரானின் கட்சி இந்த தேர்தலில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டுகின்றன.
இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி தொண்டர்கள் தங்கள் கட்சியின் முன்னணி நிலவரத்தை கொண்டாடி வருகின்றனர்.
இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி இந்த தேர்தலில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், அவரது கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
அவ்வாறான சூழலில், மற்ற கட்சிகளோடு இணைந்து தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முற்படக்கூடும். ஆனால், அதிகாரபூர்வமாக இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்வரை ஆட்சி அமைக்கப் போவது குறித்து உறுதியாக கூற முடியாது.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள குவட்டாவில் ஒரு வாக்குச்சாவடி அருகே நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
வாக்குச்சாவடிக்கு மிக அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக பிபிசி உருது செய்தியாளர் முகமது காசிம் தெரிவித்தார்.
இதுவரை வெளிவந்த தகவல்களின்படி, இந்த குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உதவியுடன் நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான ராணுவம் தங்களை இலக்கு வைத்து செயல்படுவதாக பி.எம்.எல் கட்சி குற்றம்சாட்டுகிறது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கிட்டத்தட்ட 17,000 கட்சி உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மற்றொரு புறம், ஊடகங்கள் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதோடு, கடுமையான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றன. பயங்கரவாதக் குழுக்கள் தேர்தலில் பங்கெடுப்பது பாகிஸ்தானின் சில ஜனநாயகவாதிகளுக்கு கவலையளிப்பதாக உள்ளது.
தனக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அந்நாட்டு ராணுவம், தனது பழைய அரசியல் சூழ்ச்சிகளையே தொடர்வதாக பலரும் நம்புகின்றனர். தேர்தலில் மோசடி செய்ய "மோசமான, தீவிரமான மற்றும் இடைவிடாத முயற்சிகள்" மேற்கொள்ளப்படுவதாக கூறும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம், இது "முறையான மக்களாட்சிக்கு பாகிஸ்தான் மாறுவதில் ஆபத்தான தாக்கங்களை" ஏற்படுத்தும் என்று கூறுகிறது.
இந்த மாதம் 13ஆம் தேதியன்று கிட்டத்தட்ட 150 பேரை பலி கொண்ட பலூசிஸ்தானில் நடைபெற்ற தாக்குதல் (தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது) உட்பட தேர்தல் பிரசாரங்களில் வன்முறைகள் அதிக அளவில் நடைபெற்றன.