SuperTopAds

வட கொரியா மீது அமெரிக்காவின் கடுமை மாறுகிறதா?

ஆசிரியர் - Editor II
வட கொரியா மீது அமெரிக்காவின் கடுமை மாறுகிறதா?

முன்நிபந்தனைகள் இல்லாமல் வட கொரியாவுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தாயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

டில்லர்சன்னின் கருத்து அமெரிக்காவின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறுவதாகத் தோன்றுகிறது. பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு முன்பு வட கொரியா கட்டாயம் தனது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் அமெரிக்கா முன்பு கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால், வட கொரியா குறித்து அதிபர் டிரம்பின் பார்வையில் மாற்றம் ஏற்படவில்லை என டில்லர்சன் கருத்து தெரிவித்த சில மணி நேரம் கழித்து வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்கள், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடைக்கு வழிவகுத்தது.

இதற்கிடையே வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஐ.நாவின் உயரதிகாரியான ஜெஃப்ஃபரி ஃபெல்ட்மேன், ''போரைத் தடுப்பது முக்கியமானது'' என வட கொரிய அதிகாரிகள் உணர்ந்துள்ளனர் என செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்கா, வட கொரியா இடையிலான ராஜதந்திர உறவுகள் வட கொரியாவின் சமீபத்திய அணு மற்றும் ஏவுகணை சோதனைகளால் மோசமடைந்தது.

ரெக்ஸ் டில்லர்சன்

இது, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே வார்த்தை போருக்கு வழிவகுத்தது.

அட்லாண்டிக் கவுன்சில் கொள்கை கூட்டத்தில் பேசிய டில்லர்சன், ''வெறுமனே ஒரு அணு ஆயுத வட கொரியாவை ஏற்க முடியாது'' என கூறினார்.

''நாம் சந்திப்போம். பேசுவோம். பிறகு இணைந்து பணியாற்றுவதற்கான வரைபடத்தை வரைய ஆரம்பிப்போம்'' என்றார் அவர்.

ஆனால், எந்த அணு அல்லது ஏவுகணை சோதனை செய்யாமல் சில காலம் அமைதியாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், டில்லர்சன் கருத்து தெரிவித்த சில நேரம் கழித்து அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை,''ஜப்பானுக்கும், சீனாவுக்கும் தென் கொரியாவுக்கு மட்டும் வட கொரியா ஒரு பாதுகாப்பற்ற வழியில் செயல்படவில்லை. உலக நாட்டுக்கும் இது பாதுகாப்பற்றதாக உள்ளது'' என கூறியுள்ளது.