SuperTopAds

ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவில் முறைப்பாடு

ஆசிரியர் - Editor II
ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவில் முறைப்பாடு

தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கின்ற ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்ய ஸ்ரீலங்காவின் முன்னணி தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தொழிற்சங்க உரிமைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் பறித்துவந்தால் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை செய்யவும் உத்தேசித்திருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் திணைக்கள ஊழியர்களின் தொழிற்சங்கத்தை நசுக்கும் அடக்கு முறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் “ரயில்வே திணைக்கள ஊழியர்கள் கடந்த 6 தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். எனினும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் தலையிடாமல் நேற்றைய தினமே அரசாங்கம் அதில் தலையீடு செய்து குழு அமைத்து பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சி செய்தது. எனினும் கடந்த திங்கட்கிழமை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியதுடன், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

சாதாரணமாக தொழிற்சங்கப் போராட்டமொன்றை தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் அடக்குமுறையை கையாண்டது. அதன் ஓரங்கமாகவும், ஆயுதமாகவும் பயன்படுத்திய அரசாங்கம், ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் அறிவிக்க முயற்சித்தமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டபோது, தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாப்பதாக ஸ்ரீலங்கா உறுதியளித்தது. இருப்பினும் உள்நாட்டில் அந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவருகிறது. இதனை சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சென்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக முறையிட தீர்மானித்துள்ளோம்” என்றார்.