அமெரிக்கா வாங்க மீண்டும் பேசலாம்: புதினுக்கு டிரம்ப் அழைப்பு
வரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்கா வாருங்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
புதின் வருகைக்கான விவாதங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்று தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் டிரம்பின் ஊடகச் செயலாளர் சாரா சாண்டர்ஸ்.
ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் கடந்த திங்கள்கிழமை நடந்த டிரம்ப்-புதின் உச்சிமாநாட்டின் நிறைவில் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு இல்லை என்று பொருள் தரும் வகையில் டிரம்ப் அளித்த ஒரு பதில் அமெரிக்காவில் அவரை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. மறுநாள் அவர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். ஒரு வார்த்தை மாறிவிட்டது என்றார். ஆனால், அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டது வேறு யாராவது கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.