SuperTopAds

தாய்லாந்து குகை: மயக்க மருந்து கொடுத்து மீட்கப்பட்டார்களா சிறுவர்கள்?

ஆசிரியர் - Editor II
தாய்லாந்து குகை: மயக்க மருந்து கொடுத்து மீட்கப்பட்டார்களா சிறுவர்கள்?

தாய்லாந்து சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் தாம் லுவாங் மலைக் குகைக்குள் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பங்கெடுத்து நடந்த இந்த மீட்பு குறித்த செய்திகள் இன்னும் வந்த வண்ணம் உள்ளன.

 செய்தியாளர்  அந்த சிறுவர்கள், மீட்புப் பணி மற்றும் அடுத்தது என்ன என்பது குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்.

அந்த சிறுவர்கள் மற்றும் கால்பந்து அணியின் துணைப் பயிற்சியாளர் எக்கபோல் 'ஏக்' சந்தாவாங் குறித்து இந்த சம்பவத்துக்கு முன்பு வரை நம் யாருக்கும் தெரியாது.

அந்த சனிக்கிழமையன்று (ஜூன் 23) அவர்கள் ஒரு கால்பந்து போட்டியில் விளையாட இருந்தார்கள். ஆனால், பின்னர் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறார் தலைமைப் பயிற்சியாளர் நொப்பரத் கந்தவோங். அதற்கு பதிலாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது.

அந்த சிறுவர்கள் அனைவரும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக விருப்பம் உள்ளவர்கள். அவர்களை சைக்கிளில் கால்பந்து மைதானம் செல்ல எக்கபோல் கூறியுள்ளார்.

அவர்கள் குகையை நோக்கி செல்வதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

அன்று சிறுவர்களில் ஒருவரான பீராபத் 'நைட்' சோம்பியெங்ஜாயின் பிறந்த நாள். அன்று அவர்கள் அனைவரும் ஒரு உள்ளூர் உணவு விடுதியில் 700 பாட் அளவுக்கு பணத்தை செலவிட்டுள்ளனர். அது அப்பகுதியில் ஒரு பெரிய தொகை.

எக்கபோல் மிகவும் அமைதியானவர் என்றும் அந்த குகைக்குள் செல்வது அந்த சிறுவர்களின் திட்டமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் அவர்களது பயிற்சியாளர் நொப்பரத் கந்தவோங்.

இதற்கு முன்னரும் அவர்கள் அந்த குகைக்குள் சென்றுள்ளனர்

அந்த சிறுவர்கள் அனைவரும் மிகவும் வலிமையற்றவர்களாக இருப்பதாகவும், அவர்களது பெற்றோரை சந்தித்தால் நோய் கிருமிகளின் தொற்று உண்டாக வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தாய்லாந்து குகை

இப்போது தாய்லாந்தில் அந்த சிறுவர்களின் உயிர்கள் மிகவும் மதிப்பு மிக்கவை. கடுமையான முயற்சிகளுக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு உண்டாகும் நோய்த் தோற்றால் அந்த முயற்சிகள் வீணாவதை யாரும் விரும்பவில்லை.

அவர்கள் பெற்றோர் அனைவரும் மிகவும் பின்தங்கிய பொருளாதார பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதையே கேட்டு நடந்து பழகியவர்கள். அதனால் தங்கள் குழந்தைகளை சந்திக்கக்கூடாது எனும் உத்தரவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

முதலில் சன்னல் வழியாக மட்டுமே தங்கள் மகன்களைப் பார்க்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இப்போது கை உறைகள் மற்றும் முக மூடி அணிந்துகொண்டு சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அறைக்குள் நுழைய மெல்ல மெல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

துணை பயிற்சியாளர் 'ஏக்' மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

இப்போது அதற்கு வாய்ப்பில்லாதது போலவே தோன்றுகிறது. 12 ஆண்டுகள் இளம் துறவியாகி இருந்த அவர் தியானம் உள்ளிட்ட முயற்சிகள் மூலம் அந்த சிறுவர்கள் தங்கள் உடல் வலிமையை இழக்காமல் பார்த்துக் கொண்டார். அதற்காகவே சிறுவர்களின் பெற்றோர் அவரை மன்னித்து விட்டதாகக் கூறியுள்ளார்.

அவர் மீண்டும் சில காலம் தம்மை ஆற்றுப்படுத்திக்கொள்ள துறவறத்திற்கே அனுப்பப்படலாம் என்றும் நொப்பரத் கூறுகிறார்.

இது தாய்லாந்து மக்களின் ஆதரவையும் பெறும். பின்னர் மீண்டும் இயல்பு வாழ்க்கை வாழ அவர் அனுமதிக்கப்படுவார்.

அந்த சிறுவர்கள் காணாமல்போன ஒன்பதாம் நாள்தான் கண்டுபிடிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் எடை அதிக அளவில் குறையவில்லை.

THAI NAVY

நைட்டின் பிறந்தநாளன்று அவர்கள் கைவசம் இருந்த சொற்ப உணவே அவர்களிடம் இருந்தது. அவர்கள் அனைவரும் உடல் வலிமை மிக்க, நன்கு பயிற்சி பெற்ற கால்பந்து வீரர்கள்.

இதனால் அவர்கள் தங்களிடம் இருந்த உணவை கவனத்துடன் பகிர்ந்துகொள்ளவும், ஒருவரை ஒருவர் ஆதரிக்கவும் அவர்களால் முடிந்திருக்கும். ஒரு வேளை பாடல்களும் அவர்கள் வலிமையுடன் இருந்திருக்க உதவியிருக்கும்.

மாசுபட்ட நிலத்தடி நீரை அருந்துவதைவிடவும், பாறைகளில் இருந்துவரும் நீரை அருந்துமாறு அவர்களிடம் ஏக் கூறியிருந்தார். தனது உணவைக் குறைத்துக்கொண்டு அவர்களை அதிகம் உணவு உண்ணச் சொன்னார்.

அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு புரதம் மிகுந்த 'ஜெல்' வழங்கப்பட்டது. பின்னர் மீட்கப்படும் முன்னர் இயல்பான உணவுகள் வழங்கப்பட்டன.

பெரும்பாலான நேரம் அவர்கள் இருட்டிலேயே இருந்தனர். அவர்கள் மலிவான கை விளக்குகளுடன் குகைக்குள் சென்றனர்.

தாய்லாந்து குகை

அவர்கள் கண்டறியப்பட்டபின், ஒரு ராணுவ மருத்துவரும் மூன்று முக்குளிப்பு வீரர்களும் அவர்களுடனேயே தங்கிவிட்டனர். அப்போது அவர்களுக்கு நல்ல வெளிச்சம் தரும் விளக்குகள் கிடைத்தன.

சிறுவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதா?

இது குறித்த தகவல்களை யாரும் வெளிப்படையாக சொல்லவில்லை.

அவர்களுக்கு குறைந்த அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக தாய்லாந்து பிரதமர் கூறியுள்ளார். ஆனால், அவர்களுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டது என்றும் அவர்கள் முழுவதுமாக சுயாதீன நிலையில் இல்லை என்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களில் சிலர் பிபிசியிடம் கூறினர்.

தாய்லாந்து குகை

அதற்கு காரணம், சுழலும் நீருக்குள் இருட்டில், முக்குளிப்பு உபகரணங்களுடன் செல்லும்போது அவர்கள் பயந்துவிடக் கூடாது என்பதே. அவ்வாறு அவர்கள் பயந்திருந்தால் அவர்கள் உயிருக்கு அது ஆபத்தாக அமைந்திருக்கும்.

முழுமையாக சுயநினைவு இல்லாத அந்த சிறுவர்களை முக்குளிப்பு வீரர்கள் சுமந்துகொண்டு அந்த குறுகலான குகைப் பாதையைக் கடந்து மீட்டு வந்தனர்.

சில நேரங்களில் அந்த சிறுவர்கள் முக்குளிப்பு வீரர்களின் உடல்களுடனும், ஸ்ட்ரெச்சர் உடனும் கட்டப்பட்டு மீட்கப்பட்டனர்.

இதற்கான செலவு யாருடையது?

பெரும்பாலும் தாய்லாந்து அரசுதான் செலவு செய்தது. பிற நாடுகளும் உதவி செய்தன. அமெரிக்கா உதவிக்கு 30 விமானப்படை வீரர்களை அனுப்பியது.

தாய்லாந்து தொழிலதிபர்கள் போக்குவரத்து மற்றும் உணவு கொடுத்து உதவினர். தாய் ஏர்வேஸ் மற்றும் பேங்காக் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் முக்குளிப்பு வீரர்கள் பயணத்திற்கு பணம் வாங்கவில்லை.

தாய்லாந்தால் தனியாக மீட்டிருக்க முடியுமா?

முடிந்திருக்காது. வேறு சில நாடுகளால் முடிந்திருக்கும். குகைகளுக்குள் முக்குளிப்பது சிறப்பு பயிற்சி தேவைப்படும் ஒரு அரிய திறமை.

அந்த தாம் லுவாங் குகையில் பயணித்து அதைப் பற்றி முன்பே அறிந்து வைத்திருந்த வெர்ன் அன்ஸ்வொர்த் எனும் முக்குளிப்பு வீரர் மிக அருகிலேயே வசித்தது அதிர்ஷ்டம்.

பயிற்சி பெற்ற பிற நாட்டினரை உதவிக்கு அழைக்க வேண்டும் என்று தாய்லாந்து அரசிடம் அவர் கூறினார். அந்த சிறுவர்கள் காணாமல் போன நாளன்றே அவர் அங்கு சென்று விட்டார்.

THAI NAVY SEALS

அவர்களை மீட்க சென்ற தாய்லாந்து கடற்படை வீரர்கள் முதலில் சற்று திணறினர். அது அவர்களுக்கு சற்று சவாலாக இருந்தது. உள்ளே உயர்ந்த நீர் மட்டத்தால் அவர்கள் வெளியேறிவிட்டனர்.

வெளிநாட்டு முக்குளிப்பு வீரர்கள் வந்தபின்தான் அவர்களால் குகையின் மூலை முடுக்குகளுக்குள் செல்ல முடிந்தது. கயிறு மற்றும் கம்பிகளை அமைப்பது, விளக்கு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அமைப்பது ஆகியவை பின்னரே முடிந்தது.

இந்த முயற்சிகள் அனைத்தையும் சிறப்பாக நிர்வகித்த பாராட்டுகள் நிச்சயம் தாய்லாந்து அரசையே சேரும்.