தாய்லாந்து குகை: சிறுவர்களை மீட்க 8 மணி நேரத்தில் தீர்வு அளித்த எலான் மஸ்க்
தாய்லாந்து குகை: சிறுவர்களை மீட்க எட்டு மணிநேரத்தில் தீர்வு அளித்த எலான் மஸ்க் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தாய்லாந்து குகையில் சிக்குண்டு தவித்த கால்பந்து வீரர்களான 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை மீட்கும் பணியில் பல நாடுகளை சேர்ந்த குழுக்கள் பரபரப்பாக செயல்பட்டு வந்த சூழ்நிலையில், அதற்கான எளிமையான தீர்வை கூறினார் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயலதிகாரியான எலான் மஸ்க்.
குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு ஒன்று அங்குள்ள நீர் மட்டம் குறைய வேண்டும் அல்லது அவர்கள் ஸ்கூபா டைவிங் எனப்படும் முக்குளித்தல் முறையை கற்றுக்கொண்டு தப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் அதி நவீன ராக்கெட்டான பால்கான் - 9ன் பகுதிகளை கொண்டு கரடு, முரடான மற்றும் தண்ணீர் நிறைந்த பகுதிகளை கடந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் "குழந்தைகள் அமரும் வகையிலான சிறிய நீர்மூழ்கியை" உருவாக்கப்போவதாக அறிவித்தார்.
மேலும், பால்கான்-9 ராக்கெட்டின் பாகத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த நீர்மூழ்கி வாகனத்தின் பரிசோதனை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள நீச்சல் குளத்தில் மேற்கொள்ளப்படுவதன் காணொளியை தனது ட்விட்டர் கணக்கில் ஏற்கனவே பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், தாய்லாந்திலுள்ள குகைக்கு நேரில் சென்ற எலான் மஸ்க், தான் அங்குள்ள மூன்றாவது குகையை பார்வையிட்டதாகவும், இந்த மீட்புப் பணிக்காக உருவாக்கப்பட்ட நீர்மூழ்கியை எதிர்கால தேவையை கருத்திற்கொண்டு குகையிலேயே விட்டுச்செல்ல உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
ஆனால், தாங்கள் முன்கூட்டியே முடிவுசெய்த திட்டமே போதுமானதாக இருந்ததால், இந்த நீர்மூழ்கி வாகனத்தை பயன்படுத்துவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்று தாய்லாந்து கப்பற்படை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஸ்பேஸ்எக்ஸ் என்னும் தனது விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் போரிங் என்னும் எதிர்கால போக்குவரத்தை கட்டமைக்கும் தனது மற்றொரு நிறுவனத்தின் ஆய்வாளர்களை தாய்லாந்திற்கு கள நிலவரத்தை அறிவதற்கு எலான் மஸ்க் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.