SuperTopAds

தாய்லாந்து குகை: 12 சிறுவர்களும் கால்பந்து பயிற்சியாளரும் வெற்றிகரமாக மீட்பு

ஆசிரியர் - Editor II
தாய்லாந்து குகை: 12 சிறுவர்களும் கால்பந்து பயிற்சியாளரும் வெற்றிகரமாக மீட்பு

கடந்த 17 நாட்களாக தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள், அவர்களது பயிற்சியாளர் மற்றும் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முக்குளிப்பு வீரர்கள், மருத்துவர்கள் என அனைவரும் குகையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் சியாங் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை இன்னும் சற்று நேரத்தில் அவர்களது குடும்பத்தினர் சந்திக்கவுள்ளனர்.

சிறுவர்களை மீட்பதற்காக குகைக்குள் சென்ற மீட்பு குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு கப்பற்படை வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்கள் இன்னும் சில நிமிடங்களில் குகையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் என்றும் மீட்பு பணியின் தலைவர் தெரிவித்திருந்தார்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனுமதிக்கப்பட்டுள்ள சியாங் ராய் மருத்துவமனையின் முன்பு கூடியுள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தாங் லுயாங் குகையில் சிக்குண்டிருந்த இந்த 12 சிறார்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் கண்டுபிடிக்க குகை ஆய்வில் சிறந்த வோலாதன், ரிச்சர்ட் ஸ்டான்டன் மற்றும் ராபர்ட் ஹார்பர் ஆகிய 3 பிரிட்டன் நிபுணர்கள் உதவியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்பும் மீட்புப் பணியாளர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.