இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிஸ் : பிரான்ஸில் வெடித்த மக்கள் போராட்டம்
பிரான்ஸில் இளைஞர் ஒருவரை பொலிஸார் சுட்டுக்கொன்றதையடுத்து மக்கள் ஆவேசமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையிலும் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
பிரான்ஸின் மேற்கு பகுதியில் உள்ள நன்டெஸ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 22 வயது மதிக்கத்தக்க அபுபக்கர் என்ற வாலிபர் காரில் வந்துள்ளார். அவரது காரை பொலிஸார் நிறுத்தி அவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் காரை பின்னோக்கி நகர்த்தி தப்பிக்க முயன்றார் எனக் கூறப்படுகிறது. காரை நகர்த்தியபோது ஒரு பொலிஸ்காரரின் காலில் மோதியது. இதனால் மற்றொரு பொலிஸ்காரர், துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அபுபக்கர் இறந்துவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலையில் தெருக்களில் திரண்டு ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகத்தை மூடிக்கொண்டு தெருக்களில் அங்குமிங்கும் ஓடிய சில இளைஞர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகளை அடித்து நொறுக்கினர். மருத்துவ மையம், நூலகம் உள்ளிட்ட சில கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.
பின்னர் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு, போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.