SuperTopAds

கடைசி நேரத்தில் உயிர்பிழைக்க போராடிய நபர்.. புராரி மரணத்தில் தடயவியல் துறை திடுக்கிடும் தகவல்!

ஆசிரியர் - Editor II
கடைசி நேரத்தில் உயிர்பிழைக்க போராடிய நபர்.. புராரி மரணத்தில் தடயவியல் துறை திடுக்கிடும் தகவல்!

டெல்லி: புராரி மரண விவகாரத்தில் தடயவியல் அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். டெல்லியின் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்று கிழமை 10 பேர் துாக்கில் தொங்கிய நிலையிலும், 75 வயது மூதாட்டி, பக்கத்து அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 1ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தக் குடும்பத்தினர் கடவுளைத் தரிசிக்கப் போகிறோம் என்று எழுதிவிட்டு, தற்கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவர்கள் எழுதிய டைரியில், உடல் தற்காலிகமானது, கண்களையும், வாயையும் மூடிக்கொண்டால் பயத்தில் இருந்து விடுபடலாம் என்று எழுதி வைத்துள்ளனர். இதனால், போலீஸார் தற்கொலை என்ற ரீதியில் வழக்கை விசாரித்து வந்தனர்.

மேலும் அந்த வீட்டின் பின் பக்க சுவரிலிருந்து, 11, 'பைப்'புகள் மர்மமான முறையில், சுவரில் பொருத்தப்பட்டிருந்தது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

மர்ம பைப்புகள்

இந்நிலையில் 11 பேரின் மரணம் தற்கொலை தான் என சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. 11 பேரின் மரணத்தில் எந்த சதியும் இல்லை என சிசிடிவி பதிவின் மூலம் போலீசார் உறுதிபடுத்தினர்.

இறந்த 11 பேரில் ஒருவரான மூத்த மருமகள், தற்கொலைக்கு நாற்காலியை கொண்டு செல்வதும், இறந்த 2 சிறுவர்கள் தற்கொலை செய்ய வயர்களை கொண்டு செல்வதும், அவர்களின் எதிர்வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

கடைசி நேரத்தில் போராட்டம்

மேலும் சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் புவனேஷ் பாட்டியா என்ற 50 வயது நபர் கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடியது தெரியவந்துள்ளது.

கயிறை இழுத்த கை

புவனேஷ் பாட்டியாவின் ஒரு கை அவரது கழுத்தில் மாட்டியிருந்த கயிறை பிடித்து இழுப்பது போல் இருந்ததாக தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடியாயிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

திடுக்கிடும் தகவல்கள்

ஆனால் கடைசி முயற்சி வீணாகி அவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். புராரி மரண விவகாரத்தில் நாள்தோறும் ஒவ்வொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி வருவது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.