தாய்லாந்து குகை: "சிறுவர்களை நான்கு நாட்களில் மீட்க வாய்ப்பு"
கடந்த இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் குகையொன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை நான்கு நாட்களில் மீட்க வாய்ப்புள்ளதாக மீட்புப்பணி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை அங்கு சூழ்நிலை "கச்சிதமாக" உள்ளதாக நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போது அந்த பகுதியில் பொழிந்து வரும் பருவமழை தொடர்ந்தால், குறுகிய பாதையை கொண்டுள்ள குகை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படும் என்ற கவலை நிலவுகிறது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்த குகையை பார்ப்பதற்காக சென்ற கால்பந்து வீரர்களான இந்த 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் அங்கு நீர்மட்டம் உயர்ந்ததால் சிக்குண்டனர்.
குகையில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளை மீட்புப்பணி குழுவினர் அளித்து வரும் வேளையில், அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான பணியில் சர்வதேச குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த குகை அமைந்துள்ள சியாங் ராய் மாகாணத்தின் ஆளுநரான நரோங்சக், "குகையில் சிக்கியுள்ளவர்களின் உடல்நிலை, நீரின் மட்டம் மற்றும் வானிலை போன்றவற்றை பார்க்கும்போது, தற்போது முதல் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் அவர்களை மீட்பதற்கான சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது" என்று கூறுகிறார்.
"நாங்கள் என்ன செய்யமுடியும் என்பது குறித்த தெளிவான முடிவை எடுக்க வேண்டும்."
மேற்கண்ட கருத்துக்களை அவர் கூறியவுடன், சனிக்கிழமை இரவு அந்த பகுதியில் சிறிது நேரத்திற்கு கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. இது அவர்களின் திட்டத்தை பாதித்ததா என்பது குறித்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை நேரத்தில், குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் தங்களது குடும்பத்திற்கு எழுதியுள்ள கடிதங்களை முக்குளிப்பவர்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
அதில், ''கவலைப்படாதீர்கள்.. நாங்கள் தைரியமாக உள்ளோம்'' எனக் கூறி தங்களது பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
''ஆசிரியரே, எங்களுக்கு நிறைய வீட்டுப்பாடங்களைத் தராதீர்கள்'' என ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுவர்களில் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு, இச்சிறுவர்கள் அணியின் கால்பந்து பயிற்சியாளரும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
''அன்பிற்குரிய சிறுவர்களின் பெற்றோர்களே. தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். மீட்பு குழுவினர் எங்களை நன்றாக பார்த்துக்கொள்கின்றனர்'' என 25 வயதான பயிற்சியாளர் கூறியுள்ளார்.
''என்னால் முடிந்தவரைச் சிறுவர்களை கவனித்துக்கொள்வேன் என வாக்குறுதி அளிக்கிறேன். எங்களுக்கு உதவியளிக்க வரும் அனைவருக்கும் நன்றி'' எனவும் அவர் கூறியுள்ளார்.
அபாயகரமான இந்த பணியில் பெருமளவிலான ராணுவம் மற்றும் பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுவர்களுக்கு பிராண வாயு சிலிண்டர்களை வழங்க சென்ற முக்குளிப்பவர் ஒருவர் திரும்பும் வழியில் உயிரிழந்த சம்பவம், அங்கு நிலவும் மோசமான சூழ்நிலையை உணர்த்துவதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் கருதுகின்றனர்.
சிறுவர்கள் தற்போது ஒரு உலர்ந்த இடத்தில் உள்ளதாகவும், ஆனால் மழை தொடர்ந்து பொழியும் பட்சத்தில் அவர்கள் இருக்கும் இடத்தின் அளவு 108 சதுர அடிகளாக குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் நரோங்சக் கூறுகிறார்.
சிறுவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு முக்குளித்தல் பயிற்சி தேவையென்றும், ஆனால் இன்னமும் அதை அவர்கள் கற்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
முன்னதாக, சிறுவர்கள் குகையிலிருந்து மீட்கப்படுவதற்கு சில மாதகாலமாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ராட்ச இயந்திரங்களை கொண்டு குகையில் துளையிட்டு அங்குள்ள நீரை வெளியேற்றி, அவர்களை பத்திரமாக வெளியே அழைத்து வரும் பணி முழுவீச்சியில் நடைபெற்று வருகிறது.