பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது ஒரு பாகிஸ்தான் நீதிமன்றம். சொகுசு லண்டன் குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம் மரியத்துக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருபது லட்சம் பவுண்ட் (ஒன்றே முக்கால் கோடி இந்திய ரூபாய்) அபராதமும் விதித்துள்ளது.
அத்துடன் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியத் தீர்ப்பின்படி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் நிறுவன தலைவரும், நாட்டின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியற்றவர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முறைகேடாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டதால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதியன்று நவாஸ் ஷெரீஃபை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.
தனது சொத்து மற்றும் வருவாய் ஆதாரங்களைப் பற்றி விசாரணையில் நவாஸ் ஷெரீஃபால் நேரடியான மற்றும் தெளிவான பதில்களை கொடுக்க முடியவில்லை. பாகிஸ்தான் நாட்டின் அரசியலமைப்பு சாசனத்தின்படி நேர்மையற்ற எந்தவொரு நபரும் நாட்டை ஆள அனுமதிக்க முடியாது.
பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி, அரசு பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர், கட்சித் தலைவர் உள்ளிட்ட வேறு பதவிகளை வகிக்க முடியாது. இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் அரசியல் கட்சியில் பதவி வகிக்க முடியாது என்னும் பாகிஸ்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1976-ல் உள்ள விதியை நீக்கி, அரசு ஊழியர் அல்லாத எவரும் அரசியல் கட்சியில் பதவி வகிக்க முடியும் என்று திருத்தம் செய்து தேர்தல் சீர்திருத்த மசோதா இயற்றப்பட்டது.
இந்த மசோதா பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அதிபர் மம்னூன் உசேனின் ஒப்புதலைப் பெற்று தேர்தல் சீர்திருத்த சட்டம் 2017 என்ற சட்டமாக மாற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், மீண்டும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் பதவிக்கு வந்தார். ஆனால் எதிர்கட்சிகள் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் (நவாஸ்) பதவியில் இருந்து, நவாஸ் ஷெரீபை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், பிரதமராக பதவியில் இருந்து விலக்கப்பட்ட பிறகு, கட்சித் தலைவராக நவாஸ் மேற்கொண்ட முடிவுகள் அனைத்தும் செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாகிப் நிஸார், எந்தவொரு அரசு பதவிக்கும் தகுதியில்லாத ஒருவர் எப்படி அரசியல் கட்சிக்கு மட்டும் தலைமை வகிக்க தகுதி பெற்றவராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.