2 டன் தங்கம் பதுக்கிய 'தங்க நாணய சுல்தான்' இரானில் கைது
உள்ளூர் சந்தையை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்வதற்காக, இரண்டாயிரம் கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவரை கைது செய்திருப்பதாக இரானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெயர் தெரிவிக்கப்படாத 58 வயதான இவர், தன்னுடைய கூட்டாளிகளை பயன்படுத்தி கடந்த 10 மாதங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு மேலாக சேர்த்து பதுக்கி வைத்துள்ளதாக தெஹ்ரான் காவல்துறையின் தலைவர் ஜெனரல் ஹூசைன் ரஹிமி தெரிவித்துள்ளார்.
தங்க நாணய சுல்தான் என்று அந்த மனிதன் தன்னை அழைத்து வந்துள்ளார்.
கடந்த மே மாதம் இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர், இரானியர்கள் தங்க நாணயங்களை வாங்கி வருகிறார்கள்.
இரான் மீது மீண்டும் தடைகளை விதிக்க போவதாக அமெரிக்கா கூறியுள்ளதால், இரானின் நாணய மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு முடிவில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இரானின் நாணய மதிப்பு 43 ஆயிரம் ரியால் என்று இருந்தது.
ஆனால், புதன்கிழமையன்று அதிகாரபூர்வமற்ற அன்னிய செலாவணி பரிமாற்ற சந்தையில் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 81 ஆயிரம் ரியாலாக இருந்தது.
ரியால் மதிப்பு வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, 2 வாரங்களுக்கு முன்னால், தெஹ்ரான் கிராண்ட் பஜாரிலுள்ள வணிகர்கள் தங்களுடைய கடைகளை மூடிவிட்டு, தலைநகரில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டனர்.
இரானிய பொருளாதார பிரச்சனைகள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மாகாண பெருநகரங்களிலும், நகரங்களிலும் அரசுக்கு எதிரான இது போன்ற போராட்டங்களை உருவாக்கியிருந்தன.