தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் வெளியே வர மேலும் 4 மாதம் ஆகும்
தாய்லாந்து குகை ஒன்றில் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் ஒருவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் பணிக்கு பிறகு 13 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால், குகையில் நீர் மட்டம் அதிகரிப்பதால் ஒன்று அந்த சிறுவர்கள் நீருக்கடியில் நீந்தக் கற்கவேண்டும் அல்லது நீர் வடியும் வரை சில மாதங்கள் அங்கேயே காத்திருக்கவேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிக் குழுவினர் உயரும் நீர் மட்டத்தில் போராடி, குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு உணவும் மருந்தும் கொண்டு சென்றனர். இன்னும் குறைந்தது நான்கு மாதங்களுக்கு அவர்களுக்கு அங்கேயே உணவு சப்ளை செய்யப்படும் என்று ராணுவம் கூறியுள்ளது.
முன்னதாக, காணாமல் போன சிறுவர்கள் குறித்த செய்தி நாட்டையே உலுக்கியது; மேலும் அந்நாட்டு மக்கள் அவர்களை காப்பாற்ற மிகப்பெரியளவில் ஆதரவுக் கரம் நீட்டினர்.
அதிகரித்த நீரின் அளவு மற்றும் சேற்றின் காரணமாக தேடுதல் பணி தாமதமடைந்தது.
11-16 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவர்கள் தாம் லுவாங் குகையை சுற்றிப் பார்க்க ஜூன் 23 அன்று உள்ளே சென்றனர்.
12 சிறுவர்களும் மூ-பா அல்லது காட்டுப்பன்றி என அழைக்கப்படும் கால்பந்து குழுவை சேர்ந்தவர்கள்.
அவர்களுடன் சென்ற 25 வயது துணை பயிற்சியாளர் இரண்டு வருடத்திற்கு முன்பும், அந்த சிறுவர்களை அந்த குகைக்கு அழைத்து சென்றிருந்தார்.
அந்த குழுவின் தலைமை பயிற்சியாளர், அந்த சிறுவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தொழில்முறை கால்பந்து வீரர்களாக வேண்டும் என்று விரும்பியதாகவும், அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுச் செல்ல மாட்டார்கள் என்று நம்புவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
"அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் இந்த பணி இன்னும் நிறைவு பெறவில்லை" என சியாங் ராய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
"எங்களது பணி, சிறுவர்களை தேடுவது, மீட்பது மற்றும் அழைத்து வருவது. இதுவரை நாங்கள் அவர்களை கண்டறிந்துள்ளோம். அடுத்த பணி அவர்களை குகையில் இருந்து வெளியே கொண்டு வந்து வீட்டிற்கு அனுப்புவது" என ஆளுநர் தெரிவித்தார்.
குகையிலிருந்து நீரை வற்ற வைத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உள்ளே அனுப்பி சிறுவர்களின் உடல் நலத்தை சோதனை செய்யப்போவதாக தெரிவித்த ஆளுநர், சிறுவர்களின் உடல் நலம் அவர்களை வெளியே கொண்டு வரும் அளவிற்கு வலிமையாக இருந்தால் குகையிலிருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள் என தெரிவித்தார்.
மேலும், "சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வரை அவர்களை கண்காணிப்போம்" என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
தாய்லாந்து குகையில் கடந்த ஒன்பது நாட்களாக சிக்கித் தவிக்கும் தாய்லாந்தை சேர்ந்த 12 இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரின் குரல் முதல் முறையாக கேட்கப்பட்டுள்ளதாக பிரிட்டனை சேர்ந்த குகை மீட்பு வீரரான ஜான் வொலந்தன் கூறியுள்ளார்.
குகையிலுள்ள சிறுவர்களிடம், "நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்?" என்று கேட்டதற்கு, "பதின் மூன்று பேர்" என்று பதிலளித்தனர்.
அதாவது, இதன் மூலம் கடந்த ஒன்பது நாட்களாக குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை மீட்கும் பணியில் உதவுவதற்கு பிரிட்டனை சேர்ந்த குகை மீட்பு வீரர்கள் ஜான் வொலந்தன், ரிச்சர்ட் ஸ்டாண்டின் மற்றும் குகை வல்லுநரான ராபர்ட் ஹார்ப்பர் ஆகியோரை தாய்லாந்து மீட்புக் குழு அழைத்தது.
மூன்று பேர் கொண்ட இந்த குழுவினர் சிறுவர்கள் குகையில் காணாமல் போன மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு தாய்லாந்திற்கு வந்தனர். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,000திற்கும் மேற்பட்டோர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிட்டனின் குகை மீட்பு கழகம், தங்களது அமைப்பை சேர்ந்த குகை மீட்பு மற்றும் முக்குளித்தல் வீரர்கள் இதுவரை பல்வேறு குகைகளை ஆய்வுசெய்துள்ளதாக கூறியுள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரிட்டனின் கோடைகால நேரத்தின்படி சுமார் 16:30 மணியளவில், 12 சிறுவர்கள், அவர்களின் பயிற்சியாளர் குகையிலுள்ள ஒரு உலர்ந்த காற்று நிறைந்த பகுதியில் இருக்கும் செய்தி கிடைக்கத் தொடங்கியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"சிறிது நேரத்தில், எங்களது குகை மீட்பு வீரர்களிடமிருந்து, குகையில் தொலைந்துபோன சிறுவர்கள் உயிருடன் இருக்கும் உற்சாகரமான செய்தி கிடைத்தது."
பிரிட்டனை சேர்ந்த குகை மீட்பு வீரர்கள் ஜான் வொலந்தன், ரிச்சர்ட் ஸ்டாண்டின் ஆகியோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு பிரிட்டனின் குகை மீட்பு கழகம் மறுத்துள்ளது.