40 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியத் தரைக்கடல் பகுதியில் தென்பட்ட வெள்ளை சுறா
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் முதல் முறையாக ஸ்பெயினின் மத்தியத்தரைக்கடல் பகுதியில் மஜோர்க்கா தீவுக்கு அருகேஒரு பெரிய வெள்ளை சுறா நீந்திச் சென்றது பதிவாகியுள்ளது.
ஒரு வனவிலங்கு பாதுகாப்புக் குழு கேப்ரேரா தீவுப்பகுதியைச் சுற்றிக்கொண்டிருந்த சுறாவை படம்பிடித்துள்ளது.
இதுபோன்ற சுறா கடந்த 1976ஆம் ஆண்டு பலேரியக் தீவுப்பகுதியில் மீனவரொருவரால் கடைசியாக பார்க்கப்பட்டது.
இந்த பெரிய வெள்ளை சுறாக்கள் சுமார் இரண்டு டன் எடை மற்றும் 20 அடி நீளம் வரை வளர்ந்து, மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியது.
"ஸ்பெயினின் கடற்பகுதியில் பெரிய வெள்ளை சுறாக்கள் இருப்பது ஒரு தொடர்ச்சியான வதந்தியாகதான் இருந்து வருகிறது" என்று உயிரியலாளரும் ஆவணப்பட இயக்குநருமான பெர்னாண்டோ லோபஸ்-மிரோன்ஸ் ஈஎஃப்இ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
"ஆனால், அவற்றின் இருப்பை எங்களால் பல ஆண்டுகளாகப் பதிவு செய்யமுடியவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
வெள்ளை சுறா தீவுப்பகுதியை ஒரு மணிநேரத்திற்கு மேலாக சுற்றி வருவதை ஸ்பெயினை சேர்ந்த அல்நிடக் என்னும் வனவிலங்கு பாதுகாப்புக் குழுவினர் பதிவு செய்துள்ளனர்.
"கிட்டத்தட்ட மூன்று மீட்டர் தூரத்தில் 70 நிமிடங்களுக்கு சுறாவை படகிலிருந்து பார்த்தோம்" என்று லோபஸ்-மிரோன்ஸ் ஸ்பெயின் பத்திரிக்கையான எல் பீஸிடம் தெரிவித்துள்ளார்.