SuperTopAds

மெக்ஸிகோ தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் ஓபராடர் வெற்றிமுகம்

ஆசிரியர் - Editor II
மெக்ஸிகோ தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் ஓபராடர் வெற்றிமுகம்

மெக்ஸிகோ அதிபர் தேர்தலில், இடது-சாரி வேட்பாளரான ஆன்டரஸ் மனுவேல் லோபஸ் ஓபரடார் வெற்றி முகம் காட்டுகிறார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் மெக்ஸிகோ நகர முன்னாள் மேயரான இவர், 53% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தோல்வியை ஒப்புக்கொண்ட பிற முக்கிய போட்டியாளர்களும், லோபஸிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்கட்ட முடிவுகள் படி, ஆளும் கட்சியின் வேட்பாளரான ஜோஸ் அன்டோனியோ மூன்றாவது இடத்தில் உள்ளார். தமக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளர் ரிக்கார்டோ அனயா-வை விட ஏறத்தாழ இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளார் ஓபராடர்.

மெக்ஸிகோ அரசியலில் கடந்த நூற்றாண்டின் பெரும் பகுதியை, ஜோஸின் நிறுவன புரட்சிகர கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், அதன் புகழ் குறைந்துவிட்டது.

இந்நிலையில், லோபஸிற்கு அடுத்த இடத்தில், பழமைவாத தேசிய செயல் கட்சியின் வேட்பாளர் ரிகார்டோ அனயா உள்ளார்.

மெக்ஸிகோவின் அடுத்த அதிபராகவிருக்கும் லோபஸிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோவின் தற்போதைய தேர்தலுக்கு பல தசாப்தங்களில் இல்லாத அளவு கடும் பிரசாரம் நடைபெற்றது. 130க்கும் மேற்பட்ட அரசியல் வேட்பாளர்கள் மற்றும் கட்சிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

மெக்ஸிகோவின் கடந்த இரு அதிபர் தேர்தல்களிலும், லோபஸ் இரண்டாவது இடத்தையே பிடித்தார். ஆனால், தற்போது பிற கட்சிகளின் ஆதிக்கத்தை இவர் முடிவுக்கு கொண்டுவரப் போகிறார்.

64 வயதான லோபஸ், ஊழலை கட்டுப்படுத்துவேன் என்பதை தனது பிரசாரத்தின் மையமாக வைத்திருந்தார். மேலும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.

இத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அமெரிக்க அதிபர் டிரம்பினை அதிகம் விமர்சிப்பவர் லோபஸ் ஒபரடார்,

மெக்ஸிகோவை வர்த்தகம் மற்றும் குடியேற்றம் தொடர்பாக தாக்கிப் பேசும் டிரம்ப், வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மீண்டும் கலந்தாலோசிக்கப் போவதாகவும், அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டப் போவதாகவும் குறினார்.