தமிழக மக்களுக்காக கொட்டும் மழையில் தென்கொரிய தமிழர்கள் போராட்டம்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நீதி வேண்டும் என்றும், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரியாவில் வாழும் தமிழர்கள் கண்டன போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தமிழக மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் இன்றுவரை உண்மையில் இறந்தவர்கள் எத்தனை பேர்? துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன? இறந்த மக்களுக்கு என்ன நீதி வழங்கப்பட்டது? என எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் மத்திய மாநில அரசுகள் தெளிவாக உறுதி செய்யவில்லை என கூறிய தென்கொரிய வாழ் தமிழர்கள், கொரிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகாரும் அளித்துள்ளனர்.
தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள போசிங்கக் எனும் இடத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் முக்கியமாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்குச் சரியான நீதி வழங்க வேண்டும் என்றும், இனி இதுபோல் மக்கள் மீது அடக்குமுறையை ஏவக்கூடாது என்றும் கண்டனக் கோசம் எழுப்பப்பட்டது. மேலும் தமிழகத்தில் தற்பொழுது திட்டமிட்டுள்ள சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை இயற்கைக்கும், விவசாயிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்தால் அந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இந்தப்போராட்டத்தில் தென்கொரியாவின் சியோல், சுவோன், பியோங்டேக், சின்ச்சாங், ஜோங்காக் போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் பெண்கள், குழந்தைகள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தென்கொரியாவில் தற்பொழுது கன மழை பெய்து வரும் நிலையில் கொட்டும் மழையிலும் குடையுடன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.