சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கும் நைஜீரியா
சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 2017ல் இருமடங்காகியுள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை வைத்து இந்தியர்களின் கணக்கில் தலா ரூ.15 லட்சம் போடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாத நிலையில், ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் வைப்புத் தொகை அதிகரித்திருப்பதாக சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
ஆனால், உண்மையிலேயே ஊழல் செய்து ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை தமது நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது நைஜீரியா அரசு.
நைஜீரியாவின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான சானி அபாஷா கொள்ளையடித்த பணத்தை ஏழைக் குடும்பங்களுக்கு பிரித்து அளிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
300 மில்லியன் டாலரை சுவிஸ் அதிகாரிகள் திருப்பி அளித்த பிறகு அடுத்த மாதம், இதனை மக்களுக்கு பிரித்து அளிக்கும் பணி தொடங்க உள்ளது.
1990களில் அபாஷாவால் கொள்ளையடிக்கப்பட்ட இந்தப் பணம், 3 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு 14 டாலர் பெறும்.
அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலில் வாக்காளர்களைக் கவரவே இது வழிவகுக்கும் என விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.