சுவிஸ் வங்கிகளுக்கு கறுப்பு பணம் சென்று சேர்வது எப்படி?
கறுப்புப் பணம் பற்றிய சர்ச்சைகள் எழும்போது, அதனுடனே சுவிஸ் வங்கி அல்லது சுவிட்சர்லாந்தின் வங்கி என்ற பெயரும் இணைந்து வருவது இயல்பே. சுவிஸ் வங்கியில் இந்திய பணக்காரர்கள் பணம் வைத்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தாலோ, நமது ஆவல் உச்சத்தை அடைந்துவிடுகிறது.
சுவிஸ் வங்கிக் கணக்குகளில் இருந்த இந்தியர்களின் பணம், மூன்று ஆண்டுகளில் குறைந்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் 2017இல் நிலைமை தலைகீழாகிவிட்டது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இருந்த இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் (சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய்) என்ற அளவை அடைந்துவிட்டது.
இந்த புள்ளிவிவரங்களை வழங்கியிருப்பது சுவிஸ் தேசிய வங்கி என்பதால் இந்தத் தகவலைப் பற்றி சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி (SNB) அளித்த தகவல்களின்படி, சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 2017ஆம் ஆண்டில் 3 சதவீதம் அதிகரித்து 1.46 டிரில்லியன் சுவிஸ் ஃப்ராங்க்ஸ் அல்லது 100 லட்சம் கோடி என்ற அளவை தொட்டுள்ளது.
இந்த செய்தி மோதியின் அரசிற்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் கறுப்பு பணத்தை ஒழிப்பதே தனது லட்சியம் என்பது அவரது முழக்கமாக இருந்தது. இதைத் தவிர, சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்பர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு மத்திய அரசு சன்மானம் வழங்குவதாகவும் கூறியிருந்தது.
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, 2016 ஆம் ஆண்டு, மோதி அரசுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. ஏனெனில் அப்போது சுவிஸ் வங்கிகளில் இருந்த இந்தியர்களின் பணம் 45 சதவீதம் குறைந்தது.
1987இல் இருந்தே சுவிட்சர்லாந்து, இந்த புள்ளிவிவரங்களை வழங்கிவருகிறது. 2016ஆம் ஆண்டில் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் இருந்து அதிக அளவில் எடுக்கப்பட்டது. ஆனால் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அரசுக்கு புதிய கவலைகளை உருவாக்கியுள்ளன.
எஸ்.என்.பியின் கூற்றுப்படி, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்கள் பணம் 3200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிற வங்கிகளில் 1050 கோடி ரூபாயும், பத்திரங்களில் 2640 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தரவுகளை பார்க்கும்போது, இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, கறுப்பு பணத்தை சேர்த்து வைப்பதற்கு பெரும்பாலானோர் சுவிட்சர்லாந்தையும் அதன் வங்கிகளையும் தேர்ந்தெடுப்பது ஏன்? இரண்டாவதாக, கறுப்பு பணம் எந்த வழிகளில் சுவிஸ் வங்கிகளை சென்றடைகிறது?
முதல் கேள்விக்கான பதில், தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் கணக்கில் இருக்கும் தொகை போன்ற ரகசியத்தை சுவிட்சர்லாந்து வங்கிகள் பாதுகாக்கின்றன. இதுதான் ரகசியமாக பணம் சேர்ப்பவர்களின் முதல் விருப்பத் தெரிவாக சுவிஸ் வங்கிகள் இருக்கின்றன.
ஜேம்ஸ் பாண்ட் அல்லது பிற ஹாலிவுட் திரைப்படங்களில், சுவிஸ் வங்கி அல்லது அதன் ஊழியர்கள் காட்டப்படும்போது, அவர்கள் ரகசியத்தை காப்பாற்றுபவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். கறுப்பு சூட்-கோட் அணிந்து, கையில் உள்ள ப்ரீஃப்கேஸில் கம்ப்யூட்டரை பயன்படுத்தி வேலை செய்வதாக காட்டப்படும்.
ஆனால் இது கற்பனையாக திரைப்படங்களில் காட்டப்படுவது. உண்மையில் சுவிஸ் வங்கிகள் பிற வங்கிககளிடம் இருந்து மாறுபட்டு செயல்படுவதில்லை. ரகசியம் காப்பது என்பதே சுவிஸ் வங்கிகளின் தனிச்சிறப்பு. சுவிஸ் வங்கிகளின் ரகசியமான விதிமுறைகள் அண்மையில் தோன்றியவை அல்ல.
சுவிஸ் வங்கிகள் தங்கள் ரகசிய காக்கும் தன்மைக்காக முன்னூறு ஆண்டுகளாக பிரபலமானவை. 1713ஆம் ஆண்டில் கிரேட் கவுன்சில் ஆஃப் ஜெனீவா உருவாக்கிய விதிமுறைகளின்படி, வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் பதிவேடு அல்லது தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
ஆனால், வாடிக்கையாளர்களின் தகவல்களை சிட்டி கவுன்சிலைத் தவிர வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் அதே விதிமுறைகள் அறிவுறுத்தின. சுவிட்சர்லாந்தை பொருத்தவரை, தனது வாடிக்கையாளர் தொடர்பான தகவலை, ஒரு வங்கி பிறருக்கு கொடுப்பது குற்றம்.
வங்கிகளின் ரகசியம் காக்கும் தன்மையே, உலகம் முழுவதும் உள்ளவர்கள் சுவிட்சர்லாந்தில் கறுப்பு பணத்தை சேமிப்பதற்கான காரணம். பணம், தங்கம், நகைகள், ஓவியம் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களை சேமித்து வைப்பது தொடர்பாக சுவிட்சர்லாந்து வங்கிகள் எந்தவொரு கேள்வியையும் கேட்பதில்லை.
இருந்தபோதிலும், அதிகரித்துவரும் பயங்கரவாதம், ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு போன்றவற்றால், சட்டவிரோதமாக இருப்பதாக சந்தேகிக்கப்படும் கணக்குகளை சுவிட்சர்லாந்தில் நிராகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
இதைத் தவிர, தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தும் இந்தியா அல்லது பிற நாடுகளின் கோரிக்கைகளுக்கும் சுவிட்சர்லாந்து தற்போது செவிமடுக்கத் தொடங்கியுள்ளது. பணத்தை சேமித்து வைத்திருப்பவர் சட்டவிரோதமானவர் என்பதற்கான சான்றுகளை வழங்குபவர்களின் கோரிக்கைகளையும் பரிசீலிக்கிறது.
எல்லாம் சரி, கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிகளை சென்றடைவது எப்படி என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லையே என்று கேட்கிறீர்களா? இதற்கான பதில், சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கப்படும் விதத்தில்தான் இருக்கிறது.
18 வயதுக்கு அதிகமான எவரும் சுவிஸ் வங்கியில் கணக்குத் தொடங்கலாம்.
இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது சட்டவிரோதமாக பணம் போடப்படுவதாகவோ தோன்றினால், வங்கி, கணக்கு தொடங்கக் கோரும் விண்ணப்பத்தை வங்கி நிராகரிக்கலாம்.
பிஸினெஸ் ஸ்டேண்டர்ட் பத்திரிகையின்படி, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 400 வங்கிகளில், யூ.பி.எஸ் மற்றும் கிரெடிட்ஸ் சூயிஸ் குழுமம் ஆகியவை மிகப்பெரிய வங்கிகள் ஆகும்
எதுபோன்ற கணக்குகளில் அதிகபட்ச ரகசியம் பாதுகாக்கப்படும்? 'எண்ணிடப்பட்ட கணக்குகள்' (Numbered account) என்று அழைக்கப்படுகிம் கணக்குகள் அதிக ரகசியமானவை. இந்த கணக்குடன் தொடர்புடைய அனைத்து தகவல்களும் கணக்கு எண் அடிப்படையிலானவை, இதில் எந்த பெயரும் குறிப்பிடப்படாது. அதாவது யார் பெயரில் கணக்கு இருக்கிறது என்ற தகவலே யாருக்கும் தெரியாது.
வங்கிக் கணக்கு யாருடையது என்பது வங்கியில் உள்ள சிலருக்கு மட்டுமே தெரியும். ஆனால் இந்த வகை கணக்குகளைத் தொடங்குவது சுலபமானதில்லை.
எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ள விரும்பாதவர்கள், வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டையோ அல்லது காசோலை வசதியையோ பெறுவதில்லை.
இதைத் தவிர, இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர் அதனை மூடிவிட விரும்பினால், எப்போது வேண்டுமானாலும், எந்தவித செலவுமின்றி கணக்கை மூடிவிடலாம்.