SuperTopAds

அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

ஆசிரியர் - Editor II
அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

வியாழக்கிழமையன்று மேரிலாண்டில் கேபிடல் கெசட் நாளிதழ் அலுவலகத்தில் ஒரு துப்பாக்கிதாரி ஐந்து பேரை சுட்டுக்கொன்ற நிலையில் அப்பத்திரிகையின் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

அனாபோலிஸில் உள்ள `கேபிடல் கேசட்` செய்தியறையின் கண்ணாடி வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சமீப காலத்தில் அந்த செய்தித்தாள் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் ’வன்முறை அச்சுறுத்தல்கள்’ வந்ததாக தெரிவித்த போலிஸார், இது செய்தி நிறுவனம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர்.

மேரிலாண்டில் வசிக்கும் 30 வயதுக்கு மேல் உடைய வெள்ளை நிற மனிதர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க, சந்தேக நபர் மறுப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிபிஎஸ் நியூஸின் தகவல்படி, அவர் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் விரல் ரேகைகளை அழித்துவிட்டதாகவும் தெரிகிறது.

போலி கிரனேட் குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் தனது பையில் அவர் வைத்திருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் "பெரிய துப்பாக்கியை" பயன்படுத்தியதாக தெரிவித்த அவர்கள் மேற்கொண்டு எந்தவித தகவல்களையும் அளிக்கவில்லை. வெடிகுண்டாக இருக்கலாம் என கருதிய பொருளை செயலிழக்கச் செய்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற கட்டடத்திலிருந்து 170 பேர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டதாக போலிஸார் தெரிவித்தனர்.