அரசு குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி
ஜப்பான் மன்னர் அகி ஹிட்டோவின் மூத்த பேத்தி இளவரசி மாகோ (25). இவர் டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த கீ கொமுரோ என்ற வாலிபரை காதலித்தார்.
சாதாரண குடும்பத்தை சேர்ந்த கீ கொமுரோ சட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய விரும்பினர். அதற்கு இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடந்தது. இவர்கள் இருவருக்கும் வருகிற அக்டோபர் 29-ந்தேதி திருமணம் நடக்கிறது.
ஜப்பானின் ஏகாதிபத்திய சட்டப்படி சாதாரண குடிமகனை மணந்தால் இளவரசி அரச குடும்ப அந்தஸ்தை விட்டு விலக வேண்டும். ஜப்பானின் அரச குடும்ப உறுப்பினரான இளவரசி மாகோ சாதாரண குடிமகன் ஒருவரை மணப்பதன் மூலம் தற்போது அரச குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார்.
இதுகுறித்து இளவரசி மாகோ கூறும்போதுஇ “இளவரசியாக இருக்கும் நான் சாதாரண நபரை திருமணம் செய்து கொண்டால் எனது இளவரசி அந்தஸ்து பறிபோய் விடும் என எனக்கு சிறுவயதிலேயே தெரியும்.
ஆனால் எங்களின் இருவரது மனமும் ஒத்துப்போய் விட்டதால் அந்த அந்தஸ்து எனக்கு பெரிதாக தெரியவில்லை. தற்போது வரை அரச குடும்பத்தில் எனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்” என்றார்.