SuperTopAds

கனடா டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை'

ஆசிரியர் - Editor II
கனடா டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை'

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அவர் புகழாரம் சூட்டினார்.

பல ஆண்டு கனவு நிறைவேற இருப்பதாகக் கூறினார் கனடா தமிழ் காங்கிரஸின் துணைத் தலைவரும் தமிழ் இருக்கையின் துணைத் தலைவருமான சிவன் இளங்கோ. இலங்கைத் தமிழர்களுக்கு இது மிகப் பெருமை வாய்ந்த மைல்கல் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ் இருக்கை அமைக்க ஐந்து மில்லியன் டாலர் தேவை என்று தெரிவித்த பல்கலைக் கழகத்தின் செயல் இயக்குநர் ஜார்ஜெட் ஜிநாடி, துவக்க விழா நிகழ்ச்சியிலேயே 6 லட்சம் டாலருக்கு மேல் நன்கொடை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த விழாவிற்காக அமெரிக்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் விஜய் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சம்பந்தம் ஆகியோர், முதன் முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்தான் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார்கள்.

"உலகிலேயே ஏழு செம்மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழிக்குத்தான் ஹார்வர்ட் போன்ற பல்கலைக்கழகத்தில் ஒரு தனி இருக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த வாரத்திற்குள் ஆக்ஸ்போர்ட, கேம்பிரிட்ஜ் மற்றும் ஹியுஸ்டன் பல்கலைக்கழகம் உட்பட ஐந்து தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்படும்" என்று தெரிவித்தனர்.

"செம்மொழியாகிய தமிழை அடுத்து பல தலைமுறைகளுக்கு எடுத்து செல்ல இது வெற்றிகரமான முயற்சி" என்றும் அவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.