வங்கி கடன் மோசடியால் நடந்த கொடூரம்… பிரித்தானியா தம்பதியர் எரித்து கொலை!
ஜமைக்கா நாட்டில் பிரித்தானிய தம்பதி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தரும் பின்னணித் தகவல் வெளியாகியுள்ளது.
ஜமைக்காவில் உள்ள Mount Pleasant பகுதியில் வெள்ளியன்று மாலை நேரம் பாதி எரிந்த நிலையில் கெயில் ஆண்டர்சன்(71) மற்றும் அவரது கணவர் சார்லி(74) ஆகியோரது உடல்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மான்செஸ்டர் பகுதியில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்னரே குறித்த தம்பதி ஜமைக்காவுக்கு குடியேறியுள்ளனர்.
கொடூரமாக கொல்லப்பட்ட இருவரது முகத்திலும் கழுத்திலும் ஏராளமான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட தம்பதியிடம் இருந்து கடன் அட்டை மோசடி பேர்வழிகளால் சுமார் 50,000 பவுண்ட்ஸ் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை சுமார் 45 முறை இவர்களது வங்கி கடன் அட்டைகளை பயன்படுத்தி உள்ளதும் தெரியவந்துள்ளது.
நீண்ட 55 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இணைந்திருந்த இருவரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆயத்தமான நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதாக அவர்களது பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
மன்செஸ்டரில் மட்டுமல்ல ஜமைக்காவிலும் தங்களது தாய் தந்தை இருவரும் மிகவும் பிரபலம் எனக் கூறும் அவர்கள்,
இந்த இழப்பில் இருந்து விடுபடுவது கடினம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த கொலை விவகாரத்தில் பேசிய பொலிஸ் அதிகாரிகள்,
முகத்திலும் கழுத்திலும் உள்ள காயங்களின் காரணம் குறித்தும், கொலை தொடர்பான நோக்கம் குறித்தும் முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை விசாரணை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், அது வழக்கு விசாரணைக்கு உதவியாக இருக்கும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.