SuperTopAds

தொடங்கியது துருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகும் நம்பிக்கையில் எர்துவான்

ஆசிரியர் - Editor II
தொடங்கியது துருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகும் நம்பிக்கையில் எர்துவான்

துருக்கியின் அடுத்த நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்ந்தேடுக்கும் தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியுள்ளது. இத்தேர்தல், தற்போதைய அதிபர் ரிசெப் தயிப் எர்துவானின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உள்ளது.

துருக்கியின் உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இத்தேர்தலில் ரிசெப் தயிப் எர்துவான் வெற்றி பெற்றால், புதிதாக சில முக்கிய அதிகாரங்கள் அவரது கைகளுக்கு செல்லும். இது ஜனநாயக ஆட்சியை பலவீனப்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குடியரசு மக்கள் கட்சியின் மைய-இடது வேட்பாளரான முஹர்ரம் இன்ஸ், எர்துவானுக்கு முக்கிய சவாலாக உள்ளார்.

ஜூன் 2016 ஆம் ஆண்டு நடந்த தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர், அமல்படுத்தப்பட்ட அவரச நிலை இன்னும் துருக்கியில் உள்ளது. 2019-ல் நடக்க வேண்டிய தேர்தலை, முன்னமே நடத்த எர்துவான் முடிவு செய்ததால் தற்போது தேர்தல் நடக்கிறது.

பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று(சனிக்கிழமை) எர்துவானும், அவரது முக்கிய போட்டியாளரான முஹர்ரமும் மிகப்பெரிய பேரணியில் கலந்துகொண்டனர். துருக்கியை ஆட்சி செய்ய தகுதியற்றவர்கள் என இவர்கள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டினர்.

'எர்துவான் வெற்றி பெற்றால், உங்கள் போன் ஒட்டுக்கேட்கப்படும். பயம் தொடரும்'' என இஸ்தான்புல்லில் கூடியிருந்த மில்லியன் கணக்கான மக்கள் மத்தியில் முஹர்ரமும் பேசினார்.

2014-ம் ஆண்டு துருக்கியின் அதிபராவதற்கு முன்பு, 11 ஆண்டுகள் துருக்கியின் பிரதமாக இருந்த எர்துவான் பிரசாரத்தின் போது, தனது போட்டியாளரான முஹர்ரமுற்கு போதுமான திறன்கள் இல்லை என கூறினார்.

முன்னாள் ஆசிரியரான முஹர்ரமும், 16 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

''இயற்பியல் ஆசிரியராக இருப்பது வேறு, நாட்டை வழிநடத்துவது வேறு. அதிபராக இருப்பதற்கு அனுபவம் வேண்டும்'' என எர்துவான் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரண்டு வாக்குப்பதிவு நடக்கும். ஒரு ஓட்டு அதிபரை தேர்ந்தேடுப்பதற்கு, மற்றொரு ஓட்டு நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தேடுப்பதற்கு.

கிட்டதட்ட 60 மில்லியன் வாக்காளர்கள் துருக்கியில் உள்ளனர்.

அதிபர் பதவிக்கு 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 50%த்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் அதிபராகத் தேர்ந்தேடுக்கப்படுவார்.

யாருமே 50%த்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்றால், அதிக ஓட்டுகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் இடையே ஜூலை 8-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும்.

உறுதியாக வெற்றி பெற்றுவிடுவோம் என எர்துவான் நம்பிக்கையுடன் உள்ளார்.