SuperTopAds

குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி

ஆசிரியர் - Editor II
குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி

ஜிம்பாப்வே ஜனாதிபதி எமர்சன் முனங்காக்வா, புலவாயோ நகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற வைட் சிட்டி மைதானத்தில் இருந்து முனங்காக்வா வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதிக்கு காயம் உண்டாகவில்லை என்று அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், மூத்த அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தனது முன்னாள் அரசியல் ஆசானான ராபர்ட் முகாபே ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டபின், முனங்காக்வா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்தார்.

எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி நாடு முழுவதும் நடக்கவுள்ள தேர்தலுக்கு பரப்புரை செய்வதற்காக அவர் புலவாயோ நகருக்குச் சென்றார்.

“ஜனாதிபதியை கொலைசெய்ய கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் ஜார்ஜ் சரம்பா தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி கெம்போ மொகாதிக்கு இந்த குண்டுவெடிப்பில் காலில் காயம் ஏற்பட்டதாக ஜிம்பாப்வே ஹெரால்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

யார் இந்த முனங்காக்வா?

சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் ராணுவப் பயிற்சி பெற்றுள்ள முனங்காக்வா 1960 மற்றும் 1970 களில் நடந்த ஜிம்பாப்வே விடுதலைப் போரில் பங்கேற்றிருந்தார்.

அவரது அரசியல் சாதுரியத்தால் ‘முதலை’ என்று வர்ணிக்கப்படும் இவர், ரொபர்ட் முகாபே ஜனாதிபதியாக இருந்த போது துணை ஜனாதிபதி பதவி வகித்தார்.

ரொபட் முகாபேவின் நீண்டாகல ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முனங்காக்வா காரணமாக இருந்துள்ள போதிலும், அந்த ஆட்சிக் காலத்தில் நடந்த மோசமான கொடுமைகள் பலவற்றில் முனங்காக்வா-வுக்கும் ஈடுபாடு உள்ளது என்று பலர் கருத்துக் கூறுகின்றனர்.

1980ல் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் உளவு வேலைக்குப் பொறுப்பானவராக இருந்தார் முனங்காக்வா.

அந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனால், அந்தக் கொலைகளில் தமக்குப் பங்கு இல்லை என்றும், ராணுவமே அதற்கெல்லாம் பொறுப்பு என்றும் முனங்காக்வா தெரிவித்துவந்தார்.