SuperTopAds

பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் களவு!! திடீர் விஜயம் செய்து கண்காணிக்க நடவடிக்கை, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் களவு!! திடீர் விஜயம் செய்து கண்காணிக்க நடவடிக்கை, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்..

வடமாகாண பாடசாலைகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாக மாகாண கல்வி அமைச்சுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. 

இந்நிலையில் சத்துணவு திட்ட வழங்கல் தொடர்பாக பாடசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ.உமாமகேஷ்வரன் கூறியுள்ளார். 

மாகாண பாடசாலைகளில் மதிய நேர சத்துணவு திட்டத்தில் முறைகேடுகள் இடம் பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழும் நிலையில் அது குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் மதிய நேர சத்துணவு திட்டத்தில் சில பாடசாலைகளில் முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

தீவக வலையப் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவு திட்டத்தில் முறைகேடு இடம்பெற்றமை தொடர்பில் ஆதாரங்களுடன் எமக்கு முறைப்பாடு கிடைத்தது.

குறித்த பாடசாலையின் அதிபர் மாணவர்களுக்காக வழங்கப்படும் சத்துணவு நிதியை முறைகேடாக கையாண்டமை தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. 

அது மட்டுமல்லாது மேலும் சில பாடசாலைகள் தொடர்பிலும் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கும் நிலையில் முறைப்பாடுகளை வழங்கியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஆதாரங்களை பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் நடக்கிறது. 

இவ்வாறான நிலையில் பாடசாலைகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தை கண்காணிப்பதற்கும் சோதனை இடுவதற்கும் விசேட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுத் திட்டம் தொடர்பில் 

பாடசாலைகளுக்கு திடீர் விஜயத்தை மேற் கொண்டு அறிக்கை இடுவார்கள். ஆகவே அரசாங்கத்தின் பாரிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தின் நோக்கம் உரிய முறையில் நிறைவேற்றப்பட வேண்டுமே அல்லாமல் 

முறைகேடுகளுக்கு அனுமதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.