பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்...! ஜனாதிபதியின் அழைப்பை தொடர்ந்து தயார்ப்படுத்தலில் தமிழ் தரப்பு தீவிரம்..

ஆசிரியர் - Editor I
பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்...! ஜனாதிபதியின் அழைப்பை தொடர்ந்து தயார்ப்படுத்தலில் தமிழ் தரப்பு தீவிரம்..

அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் மக்கள் சமகாலத்தில் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், வடக்கு அபிவிருத்தி தொடர்பில் பேச வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருக்கின்றார். 

குறித்த பேச்சுவார்த்தையானது, எதிர்வரும் 11ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு 13ஆம் திகதி சனிக்கிழமை வரையில் தொடர்ச்சியாக மூன்று தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. 

இந்தப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பிதழை ஜனாதிபதியின் வடக்கிற்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவன் குறித்த பிரதிநிதிகளுக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், 

குறித்த தொடர் பேச்சுவார்த்தையில் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் மக்கள் கூட்டணி ஆகியன பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. 

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் எம்.பி, இச்சந்திப்பின் போது வடகிழக்கில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த, சிங்கள மயமாக்கம் என்பன குறித்தும் காணாமலாகப்பட்டோர் விவகாரம் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரத்துக்குத் தீர்வு வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் அரசியல் தீர்வு பற்றியும் வலியுறுத்துவோம் என்றார். 

அதேவேளை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்வோம். அந்த சந்திப்பின்போது, தமிழ் மக்கள் முகங்கொடுத்து வரும் உடனடி மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டவுள்ளோம்.

மேலும், இந்தப் பேச்சுவார்த்தை தீர்வினை அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கவுள்ளோம். அத்துடன், ஆக்கிரமிப்பு தொடர்பான விடயங்களை ஆவணங்களுடன் வெளிப்படுத்துவதற்கு தயராகி வருகின்றேன் என்றார். 

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தப் பேச்சுவார்த்தைக்கு வடக்கு தமிழ் பிரதிநிதிகளை மட்டும் அழைத்துள்ளமையால், கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் தமது அதிருப்பதியை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், வடக்கு,கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் ரெலோ கிழக்கு மாகாணத்தினை விடுத்து வடக்கு விவகாரத்தினை மட்டும் கையாள்வது பொருத்தமற்றது என்பதை சுட்டிக்காட்டி கடிதமொன்றை ஜனாதிபதி ரணிலுக்கு அனுப்பிவைத்துள்ளது.

இதேநேரம், “நாம் முன்னோக்கிப் பயணிக்கவேண்டுமாயின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும். இனப்பிரச்சினை விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் தூரமாகிச்செல்வதால் எந்தப் பயனுமில்லை.

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமாயின், அனைத்துத்தரப்பினரும் பாராளுமன்றத்துக்குள்ளே ஒரே அரசாங்கமாகச் செயற்படவேண்டும்” என்று ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக்கூட்டத்தில் 

காணொளி மூலமாக ஆற்றிய உரையில் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு