"வட கொரியாவால் இன்னும் அச்சுறுத்தல்தான்" - அரசியல் நிதானமற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்
வட கொரியாவின் அணுஆயுதங்களால் அசாதாரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீதான தடைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் புதுப்பித்துள்ளார். வட கொரியாவால் இனி எந்த அபாயமும் இல்லை என்று கூறிய பத்தே நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வட கொரிய தலைவர் கிம்மை சந்தித்ததையடுத்து "அந்நாட்டினால் இனி அணுஆயுத அச்சுறுத்தல்கள் இல்லை" என கடந்த ஜூன் 13ஆம் தேதி அதிபர் டிரம்ப் ட்விட்டரிவ் பதிவிட்டிருந்தார்.
தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா ரத்து செய்ததையடுத்து, தடைகள் புதுப்பிக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ராணுவ பயிற்சிகளை ரத்து செய்வதாக பென்டகன் அறிவித்தது.
தோணியை மாற்றியுள்ளது போல தெரிந்தாலும், 2008ஆம் ஆண்டில் இருந்தே வட கொரியாவை பொறுத்த வரையில் அமெரிக்கா "தேசிய அவசரநிலையில்" இருந்து வந்திருக்கிறது. அப்போதில் இருந்தே, இந்த நிலைப்பாட்டை பல அதிபர்கள் வாடிக்கையாக புதுப்பித்து வந்துள்ளனர்.
"கொரிய தீபகற்பத்தில் இருக்கும் அணு ஆயுதங்களாலும் , வட கொரிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்களாலும் அபாயம் இருப்பதாக" கூறி வெள்ளிக்கிழமையன்று தேசிய அவசர நிலையை அதிபர் டிரம்ப் நீட்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் காங்கிரஸிற்கு அளித்த நோட்டீசில், "அமெரிக்காவின் பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கு அசாதாரண அச்சுறுத்தலை வட கொரியா தொடர்வதாக" டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சிங்கப்பூர் உச்சிமாநாடு வெற்றி பெற்றதாக தற்பெருமையுடன் டிரம்ப் கூறியதற்கும், தற்போதைய நடவடிக்கைக்கும் அதிக முரண்பாடுகள் இருப்பதாக ஜனநாயக கட்சி கூறியுள்ளது.