SuperTopAds

யாழ்.புத்துார் அரசினர் மத்திய மருந்தக வைத்தியருக்கு அச்சுறுத்தல், சேவைகளை நிறுத்த தீர்மானம்! இப்போதும் வேடிக்கை பார்க்கிறதாம் பொலிஸ்...

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்துார் அரசினர் மத்திய மருந்தக வைத்தியருக்கு அச்சுறுத்தல், சேவைகளை நிறுத்த தீர்மானம்! இப்போதும் வேடிக்கை பார்க்கிறதாம் பொலிஸ்...

யாழ்.புத்துார் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவு வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பிரிவில் மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குழு ஒன்றினால் மருத்துவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் அவரது அலுவலகத்துக்கும் சேதம் விளைவித்தமை தொடர்பில் 

பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த கடைசி பங்குனித் திங்கள் தினமான ஏப்ரல் 10ஆம் திகதி 

புத்தூர் சந்தியில் அமைக்கப்பட்ட தாக சாந்தி நிலையத்தில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு பெரிய சத்தமாக பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளது.

அதனால் தமது சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக மருத்துவர் தாக சாந்தி நிலைய ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் கருத்தை பொருட்படுத்தாத அவர்கள் தொடர்ச்சியாக பெரிய சத்தமாக பாடல்களை இசைக்கவிட்டுள்ளனர்.

இதன்பின்னர் குழு ஒன்று மருத்துவரை உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன், அவரது அலுவலகத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவேண்டும் அங்கு பணியாற்றும் ஊழியர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். 

அதன் பின்னரே புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை மீள ஆரம்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண நிர்வாகம் பொலிஸ் உயர்மட்டத்துக்கு அறிவித்துள்ளது.