SuperTopAds

சாராயக் கடைகாரர்களிடமா கையேந்துவது?? யாழ்.மாவட்டச் செயலரின் உத்தரவுக்கு பிரதேச செயலர்கள் சிலர் முணு.. முணுப்பாம்..

ஆசிரியர் - Editor I
சாராயக் கடைகாரர்களிடமா கையேந்துவது?? யாழ்.மாவட்டச் செயலரின் உத்தரவுக்கு பிரதேச செயலர்கள் சிலர் முணு.. முணுப்பாம்..

யாழ்.மாவட்டத்தில் 2023ம் ஆண்டுக்கான பிரதேச செயலக மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார போட்டிகளை நடத்துவது தொடர்பில் அரச அதிபர் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ள நிலையில் பணம் இல்லாமல் சாரய கடைக்காரர்களிடம் கையேந்துவதா? என பிரதேச செயலர்கள் முணு..முணுத்துள்ளனர். 

2023 ஆம் ஆண்டுக்கான பிரதேச செயலகமட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிரதேச செயலகமட்ட கலாச்சார போட்டிகளை நடாத்துவது தொடர்பில் யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களினதும் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் கடந்த வாரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது அரச அதிபர் இவ்வருடம் நடாத்தப்பட வேண்டிய பிரதேச செயலகமட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் எவ்வித தடையும் இன்றி நடாத்தப்படவேண்டும் எனக் கூறியுள்ளார்.அரச அதிபர் இவ்வாறு கூறியபோது அதில் கலந்து கொண்ட சில பிரதேச செயலாளர்கள் நிகழ்வை நடத்துவதற்கு எங்களிடம் பணம் இல்லை. 

பணத்திற்கு என்ன செய்வது என ஆதங்கத்தை தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த அரச அதிபர் பணம் தருவதற்கு எம்மிடமும் இல்லை யாரிடமாவது பெற்று நிகழ்வுகளை நடத்தியே ஆக வேண்டும் என கடும் தொணியில் பதிலளித்துள்ளாராம். கூட்டம் நிறைவடைந்ததும் பிரதேச செயலாளர்கள் கடைக்காரர்களிடம் பணம் கேட்க முடியாது. 

சாரயக்கடை முதலாளிகளிடம் தான் கையேந்த வேண்டுமென முணு முணுத்தனர்.இதன்போது அருகில் இருந்த மற்றொரு பிரதேச செயலாளர் நீங்கள் ஏன் போகிறீர்கள் கிராம சேவையாளர் அனுப்பி அரச அதிபர் நிகழ்வுகளை நடாத்தியே ஆக வேண்டும் என கூறுகிறார் உதவி செய்யுங்கள் என கூறி அனுப்புங்கள் என்றாராம்.

இதன்போது பதிலளித்த பிரதேச செயலாளர் கிராமசேவகர் போனாலும் பிரதேச செயலாளர் கேட்க சொன்னதாகதானே சொல்வார் என சிரித்தவாறு அவ்விடத்தை விட்டு சென்றாராம்.