தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதாக உள்ளது: - கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் இன்று மதியம் சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-மக்களுக்கு நல்லதை செய்தால் மட்டும் போதாது. அதை சரியாக செய்ய வேண்டும். நல்லதை செய்வதையும் பண்பு அறிந்து செய்ய வேண்டும். அதையும் கவனமாக செய்ய வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு முன்பு எனது நற்பணி மன்றத்தினருக்கு நல்லதை தேடி செய்ய வேண்டும் என்பதற்காக குறைகளை தீர்ப்போம் வா என்று ஒரு புத்தகம் எழுதி இருந்தேன். அது மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. எல்லோரும் முயன்றால் நல்லது செய்ய முடியும். தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பது கூட தவறுதான்.நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம். மக்கள் பிரச்சினையை அறிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன்.
அனைத்து மக்களையும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த சுற்றுப்பயணம். அக்கிரமம் நிகழும் போது அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதாக உள்ளது என்று கருதுகிறேன். அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.ஊடகங்கள் சொல்லாகவும், செயல்களாகவும் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நியாயத்திற்கான குரலை வலுப்படுத்த வேண்டும் என்பதில் தின்னமாக நம்புகிறேன்.
கட்சியை தொடங்கும் முன்பு அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும். அஸ்திவாரம் பலமாக இருப்பதாக கருதுகிறேன். கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டேன். கட்சியின் பெயரை இப்போதே அறிவிக்க வேண்டியது அவசியம் இல்லை. அவசரமும் இல்லை. மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காகவும், பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன். நல்ல தமிழகத்தை உருவாக்குவதே எனது கனவு. பிரச்சினைகளுக்கு எதிராக நியாயமான குரலை வலுப்படுத்த வேண்டும்.
சினிமா எடுப்பதற்கே ஆறு மாதங்கள் முன்னேற்பாடுகள் செய்பவன் நான். அரசியல் அதைவிட பெரிய பணி. நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்து விட்டது. எனது சுற்றுப்பயணத்தை முடித்ததும் முறையான அறிவிப்பை வெளியிடுவேன். நான் அரசியலுக்கு வந்தாலும், அதிகாரத்தில் இருந்தாலும் எனக்கு எதிராக கேள்வி கேட்க முடியும். தமிழகத்திற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் புதிய பயணத்தை தொடங்குவதற்கு முன்பு மக்களை சந்திப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.