குடியேறிகள் பிரச்சனை: கொள்கையை திரும்பப் பெற்றார் டிரம்ப் - கடும் அழுத்தம் காரணம்?
குடியேறிகளை கைது செய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல் இருதரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவொன்றை தொடர் அழுத்தத்தின் காரணமாக பிறப்பித்துள்ளார்.
ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் கைதுசெய்யப்படும்போது பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனியாக இடத்தில் வைக்கப்படுவது குறித்து டிரம்பின் கொள்கைக்கு முன்னதாக சர்வதேச ரீதியாக பலத்த எதிர்ப்பு எழுந்தது.
டிரம்ப் பிறப்பித்துள்ள புதிய ஆணை எப்போதிலிருந்து அமலுக்கு வரும் எனபது தெளிவாக தெரியவில்லை.
ஆனால், ஏற்கனவே அமலில் இருந்த உத்தரவின்படி பிரிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்து டிரம்ப் பிறப்பித்த இந்த புதிய உத்தரவில் எதுவும் குறிப்பிடவில்லை.
கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை பெற்றோரிடம் பிரிக்கப்பட்டு சுமார் 2342 குழந்தைகள் தனி இடத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான புதிய உத்தரவொன்றில் புதன்கிழமையன்று கையெழுத்திட்ட டிரம்ப், ''குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகிய இருதரப்பும் ஓரிடத்தில் வைக்கப்படுவர்'' என்று தெரிவித்தார்.
''பெற்றோரை பிரிந்து குழந்தைகள் தனியாக அடைத்து வைக்கப்படும் காட்சியை எனக்கு காண பிடிக்கவில்லை'' என்று குறிப்பிட்ட அவர், ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வரும் யாரையும் சட்டப்படி தண்டிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனது நிர்வாகம் எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டாது என்று தெரிவித்தார்.
முன்னதாக, குடியேறிகள் தொடர்பான பிரச்சனையில் அதிகரித்து வரும் கண்டனங்களை மீறி அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை தனித்தனியாக பிரிக்கும் தனது அரசின் கொள்கையை ஆதரித்து டிரம்ப் கருத்து வெளியிட்டார்.
வணிக மாநாடு ஒன்றில் பேசிய அவர், சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் குடும்பங்களில் பெற்றோர் கைது செய்யப்பட்டால் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியான இடத்தில் வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்கு வரும் குடியேறிகள், அமெரிக்காவுக்கு அழுகல் போல பாதிப்பு உண்டாக்குவர் என முன்னர் டிரம்ப் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.