அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்!......மாற்றுவழிக்கு அவை தயாரா?
பாரபட்சமாக' நடந்துகொள்ளும் ஐநா.மனித உரிமைப் பேரவையிலிருந்து விலகுவதாக அமெரிக்க அறிவித்துள்ள செய்தி, உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த அமெரிக்காவின் ஐநா. வதிவிடப்பிரதிநிதி நிக்கி ஹெலி,
'மனித உரிமையை மீறும் நாடுகளுக்கு உறுப்புரிமை வழங்கப்படுகிறது. இதனால் உலகின் மிக மோசமாக மனித உரிமையினை மீறும் நாடுகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றன. இந்த ஐநா மனித உரிமைப் பேரவை புனரமைப்புச் செய்யப்பட வேண்டுமென்பதை கடந்த ஒரு வருடமாக நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. ஆதலால் சுயநலனோடு கூடிய, கேலிக்கூத்தாக விளங்கும் இந்த அமைப்பிலிருந்து நாம் விலகுகிறோம்' என்று கூறினார்.
அண்மைக்காலமாக இஸ்ரேல் மற்றும் மெக்ஸிகோ குடியேற்றவாசிகள் குறித்த அமெரிக்க நிலைப்பாடு தொடர்பாக, ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் பலத்த விவாதங்களும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடக்கத்தக்கது.
ஒரு பக்கம் உலகநாடுகளுடன் வர்த்தகப் போரினை ஆரம்பித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்னொரு பக்கம் மனித உரிமைப் பேரவையோடு இராஜதந்திர போரொன்றினையும் ஆரம்பித்துள்ளார்.
ஈழமக்களைப் பொறுத்தவரை ஐநா மனித உரிமைப்பேரவை குறித்து சலிப்புமிகுந்த நம்பிக்கையற்ற பார்வை இருந்தாலும், பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இன்னமும் அதன்மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டுள்ளது.
இலங்கை விவகாரம் குறித்து தீர்மானம் கொண்டுவந்த அமெரிக்கா, பேரவையிலிருந்து விலகுவதால், அந்தத் தீர்மானத்திற்கு என்ன நடக்கும்? என்பது பற்றி தமிழ் அமைப்புகள் கவலை கொண்டுள்ளன.
மாற்று வழி தேடச் சொன்ன ஆணையாளர் சயிட் அல் ஹுசைனின் ஆழமான வார்த்தைகளை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை, இப்போது ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது.